கூடுவாஞ்சேரி, மறைமலைநகரில் வீட்டில் பதுக்கிய 2 ஆயிரம் கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல்
கூடுவாஞ்சேரி மற்றும் மறைமலைநகரில் வீட்டில் பதுக்கிய 2 ஆயிரம் கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.;
ரகசிய தகவல்
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேடு பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் வீடுகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் ரவிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அவரது உத்தரவின் பேரில், கூடுவாஞ்சேரி சரக உதவி கமிஷனர் சிங்காரவேலு தலைமையில் கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் மாலை காயரம்பேடு பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்
இதையடுத்து பிருந்தாவன் அவென்யூ பகுதியில் உள்ள பக்கிரிசாமி என்பவரது வீட்டை அதிரடியாக சோதனையிட்ட போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூ.6 லட்சம் மதிப்புள்ள மாவா என்கிற பான்மசாலா பொருட்கள், மேலும் பான்மசாலாவை தயாரிக்க தேவையான சுமார் 1,500 கிலோ கொண்ட ஜர்தா 50 மூட்டைகள், 1 கிலோ எடை கொண்ட சுண்ணாம்பு டப்பா 4, சீவல் பாக்கு, மாவா பொருளை அரைக்க பயன்படுத்திய 4 கிரைண்டர்கள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.
இதைத்தொடர்ந்து வீட்டில் இருந்த மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த ஷாஜாத் (வயது 36), அலி உசேன் (36), அப்துல் ரஹீம் (36), அப்துல் ஹாசிம் (62), ஷேக்ஆயூப் (38) ஆகிய 5 பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர்.
இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மடக்கிப் பிடிக்கப்பட்ட 4 பேரையும் கைது செய்து, செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மறைமலைநகர்
இதேபோல மறைமலைநகர் திருமூலர் நகரில் உள்ள வீட்டில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சப்- இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது அந்த வீட்டில் பதுக்கி வைத்திருந்த 580 கிலோ மாவா, சுமார் ஒரு கிலோ எடை கொண்ட 12 சுண்ணாம்பு டப்பா மேலும் போதை பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருட்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக அந்த வீட்டில் தங்கி புகையிலை பொருட்கள் தயாரித்த முகமது குர்சித் (32), முகமது ஷர்ப்ராஜ் (20), முகமது ஜாகீர் (19) ஆகிய 3 பேரையும் மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.