தவறாக மின் கணக்கெடுப்பு செய்ததாக கூறி கைகலப்பு: மின்ஊழியரை தாக்கியதாக வேன் டிரைவர் கைது

மாமல்லபுரத்தில் தவறாக மின் கணக்கெடுப்பு செய்ததாக கூறி மின் ஊழியரிடம் ஏற்பட்ட தகராறில் அவரை தாக்கியதாக வேன் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-01-31 12:35 GMT
மின்ஊழியர்

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த பேரூர் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவில் தெருவில் மின்கணக்கெடுக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்த நிலையில், கோவளம் மின் வாரிய அலுவலகத்தில் மின்மீட்டர் கணக்கெடுப்பு செய்யும் அலுவலர் முத்துராமன் (வயது 43) என்பவர் மூதாட்டி கோவிந்தம்மாள் (80) என்பவரது வீட்டில் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டார்.

இந்த நிலையில், அந்த வீட்டில் தவறாக மின் கணக்கெடுப்பு செய்து அதிக தொகையை மின் அட்டையில் குறித்ததாக கூறி ஊழியரிடம் மூதாட்டி தட்டி கேட்டுள்ளார். அப்போது மூதாட்டி கூச்சல் போடுவதை அறிந்த பக்கத்து வீட்டை சேர்ந்த வேன் ஓட்டுனர் லோகமூர்த்தி (46) என்பவர் மின் கணக்கெடுப்பாளர் முத்துராமனிடம் எந்த அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்துகிறீர்கள் என கேட்டுள்ளார்.

வேன் டிரைவர் கைது

பிறகு மின் கணக்கெடுப்பு அலுவலர் செய்த தவறை சுட்டி காட்டும் வகையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி லோகமூர்த்தி கோவளம் மின்வாரிய அலுவலகத்தில் புகார் செய்தார்.

இதையடுத்து புகார் கொடுத்த லோகமூர்த்தி மற்றும் முத்துராமனுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் கைகலப்பானது. இந்த நிலையில் லோகமூர்த்தி தன்னை தாக்கியதாக மின் ஊழியர் முத்துராமன் மாமல்லபுரம் போலீசில் புகார் செய்தார்.

புகாரின்பேரில் லோகமூர்த்தியை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, தனது கணவரை தாக்கியும், தனக்கும் மிரட்டல் விடுத்த முத்துராமன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி லோகமூர்த்தியின் மனைவி லதா (40) உள்பட 40 பேர் மாமல்லபுரம் போலீஸ் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்