புஞ்சைபுளியம்பட்டி அருகே குளத்தில் சாய கழிவுநீர் கலப்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

புஞ்சைபுளியம்பட்டி அருகே குளத்தில் சாய கழிவுநீர் கலப்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2022-01-31 14:38 GMT
புஞ்சைபுளியம்பட்டி அருகே குளத்தில் சாய கழிவுநீர் கலப்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
கழிவுநீர்
புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள நல்லூர் ஊராட்சியில் 75 ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது. இந்த குளத்தில் புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி பகுதியில் உள்ள சிறிய அளவிலான சாயப்பட்டறைகளில் இருந்து கழிவுநீர் வெளியேறி ஓடை வழியாக நல்லூர் குளத்தில் கலப்பதாகவும், இதனால் அந்த நீரை குடிக்கும் கால்நடைகள் நோய் தாக்குதலுக்கு உள்ளாவதாகவும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்ததாக கூறப்படுகிறது. 
இதைத்தொடர்ந்து நல்லூர் குளத்தில் சாய கழிவுநீர் கலப்பதை தடுக்க கோரி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர். எனினும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. 
திடீர் சாலை மறியல்
இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சத்தியமங்கலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நல்லூர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று காலை 8 மணி அளவில் ஒன்று திரண்டு வந்தனர். 
பின்னர் அவர்கள் நல்லூர் குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 
பேச்சுவார்த்தை
இதுபற்றி அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வேலுச்சாமி (புஞ்சைபுளியம்பட்டி), நெப்போலியன் (சத்தியமங்கலம்) ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. 
இதையடுத்து சத்தியமங்கலம் தாசில்தார் ரவிசங்கர், முன்னாள் எம்.எல்.ஏ. பி.எல்.சுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மைதிலி, பாவேசு ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 
போக்குவரத்து பாதிப்பு
அப்போது பொதுமக்களிடம் அதிகாரிகள் கூறுகையில், ‘ குளத்திற்கு வரும் சாய கழிவுநீரை தற்காலிகமாக மண் கொட்டி தடுப்பது எனவும், தொடர்ந்து புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி பகுதியில் இருந்து வரும் கழிவுநீரில் சாய நீர் கலக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும்,’ எனவும் கூறினா். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் பகல் 11 மணி அளவில் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சத்தியமங்கலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனினும் வாகனங்களை போலீசார் மாற்று வழியில் திருப்பி அனுப்பினர். 

மேலும் செய்திகள்