அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

Update: 2022-01-31 17:43 GMT
மேல்மலையனூர், 

மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாதந்தோறும் அமாவாசை அன்று வெளிப்பிரகாரத்தில்  ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா நோய் பரவல் காரணமாக வெளிப்பிரகாரத்தில் ஊஞ்சல் உற்சவம் நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. இருந்தாலும் ஆகமவிதிப்படி ஊஞ்சல் உற்சவம் உட்பிரகாரத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி தை மாத அமாவாசையையொட்டி நேற்று அங்காளம்மன் கோவிலில் உட்பிரகாரத்தில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், |தயிர், சந்தனம், மஞ்சள் விபூதி, குங்குமம், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், பன்னீர் ஆகியவற்றால் அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர். தொடர்ந்து உற்சவ அம்மனுக்கு ஸ்ரீராஜராஜேஸ்வரி அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் அருள்பாலித்தார். இதில் கொரோனா வழிகாட்டு முறைகளை பின்பற்றி பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு 7 மணிக்கு உற்சவ அம்மன் மேளதாளம் முழங்க கோவிலின் உட்பிரகாரத்தில் வலம் வந்து ஊஞ்சலில் எழுந்தருளினார். பின்பு பூசாரிகள் பக்திப் பாடல்களைபாடினர். இரவு 8 மணிக்கு தாலாட்டுப்பாடல்கள் பாடியவுடன் அம்மனுக்கு அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் ஊஞ்சல் விழாவை சமூக வலைதளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை இணை ஆணையர் கஜேந்திரன், உதவி ஆணையர் ராமு, அறங்காவலர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி, சந்தானம் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்