நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு

திருவாரூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பினை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

Update: 2022-01-31 18:24 GMT
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடி  அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பினை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
திருவாரூர் மாவட்டத்தில் 4 நகராட்சி, 7 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருவாரூர் ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. இந்த வகுப்பினை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  
அப்போது அவர் கூறியதாவது:-
3 கட்டங்களாக பயிற்சி வகுப்பு 
திருவாரூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது.  இதனை முன்னிட்டு வாக்குச்சாவடி பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு 3 கட்டங்களாக பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது. அதன்படி முதற்கட்டமாக மாவட்டம் முழுவதும் 11 இடங்களில் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. திருவாரூர் நகராட்சிக்கு ஜி.ஆர்.எம்.பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், மன்னார்குடி நகராட்சிக்கு பான்செக்கர்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு புனித தெரசா பெண்கள் உயர்நிலைப்பள்ளியிலும் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.
1,023 வாக்குச்சாவடி அலுவலர்கள்
இதேபோல் கூத்தாநல்லூர் நகராட்சிக்கு வி.எஸ்.டி.எசர் மெட்ரிக் பள்ளியிலும்,   பேரளம் பேரூராட்சிக்கு அரசு உயர்நிலைப்பள்ளியிலும், நன்னிலம் பேரூராட்சிக்கு அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளியிலும், குடவாசல் பேரூராட்சிக்கு அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளியிலும், கொரடாச்சேரி பேரூராட்சிக்கு பேரூராட்சி அலுவலகத்திலும், வலங்கைமான் பேரூராட்சிக்கு அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளியிலும், நீடாமங்கலம் பேரூராட்சிக்கு எஸ்.ஆர்.வி.எஸ்.அரசு உதவிபெறும் ஆரம்பப்பள்ளியிலும், முத்துப்பேட்டை ஊராட்சிக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும் என மொத்தம் 1,023 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதல் கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. 
அறிவுரை 
இப்பயிற்சி வகுப்பில் வாக்குப்பதிவு பணிகள் தொடர்பாக அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணியினை சிறப்பாக மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நகர்ப்புற தேர்தல்) கிருஷ்ணமூர்த்தி, நகராட்சி ஆணையர் பிரபாகரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்