நில அளவைத்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்
நில அளவைத்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்;
ஊட்டி
தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் நீலகிரி மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:- நில அளவை துறையில் நில அளவை ஆவணங்களை இணையதளத்தில் பார்வையிடவும், நகல் எடுக்கவும் பல்வேறு வசதிகளை அரசு செய்தது. பத்திரப்பதிவு செய்தவுடன் பட்டா மாற்றம் இணையவழியில் செய்யப்படுகிறது. இணையவழி உட்பிரிவு பட்டா மாற்றம் செய்ய வருவாய் வட்டங்களில் போதிய குறுவட்ட அளவர்கள் இல்லாததால் நில அளவர்களும், சார் ஆய்வாளர்களும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். பணி தேக்கத்தைப் போக்க அனுமதிக்கப்பட்ட அளவையர்களும் பயன்படுத்தப்படுகின்றனர். இருப்பினும் பல்வேறு மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மனுக்கள் தீர்வு காணமுடியாத நிலை தொடர்கிறது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட நவீன மறு நில அளவை பணி, புல எல்லை அளத்தல், ஆதிதிராவிடர் நலத்துறையால் வழங்கப்பட்ட பட்டாவை இணையத்தில் முறைப்படுத்துதல் போன்ற பணிகளை விரைந்து முடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் பணியாளர்கள் பணிச்சுமையை குறைக்க நில அளவர் முதல் கூடுதல் இயக்குனர் வரையிலான காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பணி தன்மைக்கு ஏற்ப புதிய பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும். முன்னுரிமை அடிப்படையில் பணி செய்தல் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை பரிசீலனை செய்து தீர்வு காண வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.