நீலகிரியில் தேர்தல் பணியை புறக்கணித்து வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம்
பாலியல் புகாரில் சிக்கிய துணை தாசில்தாரை தாக்கிய போலீஸ்காரரை கண்டித்து நீலகிரியில் உள்ளாட்சி தேர்தல் பணியை புறக்கணித்து வருவாய்த்துறை அலுவலர்கள் 400 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அலுவலகங்கள் வெறிச்சோடின.;
ஊட்டி
பாலியல் புகாரில் சிக்கிய துணை தாசில்தாரை தாக்கிய போலீஸ்காரரை கண்டித்து நீலகிரியில் உள்ளாட்சி தேர்தல் பணியை புறக்கணித்து வருவாய்த்துறை அலுவலர்கள் 400 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அலுவலகங்கள் வெறிச்சோடின.
துணை தாசில்தார்
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் துணை தாசில்தாராக பாபு (வயது 35) என்பவர் பணிபுரிந்தார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி அவர் பறக்கும் படையில் நியமிக்கப்பட்டார். கடந்த 28-ந் தேதி அதிகரட்டி பேரூராட்சியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, துணை தாசில்தார் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி துணை தாசில்தார் பாபு மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
தொடர்ந்து அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இதுகுறித்து துணை தாசில்தார் மீது துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே சம்பவத்தன்று பெண் போலீசுக்கு நேர்ந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த மற்றொரு போலீஸ்காரர் துணை தாசில்தாரை தாக்கியதாக தெரிகிறது. இதனால் வருவாய்த்துறை அலுவலர்கள் துணை தாசில்தாரை தாக்கிய போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி லவ்டேல் போலீஸ் நிலையத்தில் ஆன்லைன் மூலம் புகார் மனு அளித்தனர்.
தேர்தல் பணி புறக்கணிப்பு
இந்தநிலையில் நேற்று துணை தாசில்தார் பாபுவை தாக்கிய போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுத்து வழக்குப்பதிவு செய்ய கோரி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நீலகிரி மாவட்டம் முழுவதும் ேதர்தல் பணி புறக்கணிப்பு போராட்டம் நடந்தது. ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் கையெழுத்து போட்டு விட்டு அலுவலகங்களில் இருந்து வெளியே வந்து வளாகத்தில் ஒன்றுகூடினர். அங்கு பெண் அலுவலர்கள் உள்பட பலர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் ஆகிய 6 தாலுகாக்களில் பணிபுரியும் அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் தேர்தல் பணி பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு நேரடி நியமன அலுவலர்கள் சங்க நீலகிரி மாவட்ட தலைவர் கனி சுந்தரம் நிருபர்களிடம் கூறியதாவது:- துணை தாசில்தார் பாபுவை பறக்கும் படை சோதனையின்போது, தேவாலாவில் இருந்து எல்லை தாண்டி வந்து போலீஸ்காரர் திவாகரன் தாக்கி உள்ளார். இதுகுறித்து போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பணியின்போது அரசு ஊழியருக்கு பாதுகாப்பு இல்லை. இதை கண்டித்து தேர்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் புறக்கணித்து உள்ளோம்.
அலுவலகங்கள் வெறிச்சோடின
நீலகிரியில் வருவாய்த்துறை அலுவலர்கள், தாசில்தார்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள் என 4 சங்கங்களில் 400 பேர் பணியை புறக்கணித்து போராட்டத்தில் கலந்துகொண்டனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், பறக்கும்படை, மண்டல அலுவலர்களாக வருவாய்த்துறையினர் நியமிக்கப்பட்டனர்.
இதனால் தேர்தல் பணிகள் பாதிக்கப்பட்டதோடு, அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. அன்றாட அலுவல் பணிகளும் பாதிக்கப்பட்டது. வருவாய்த்துறை அலுவலர்கள் தேர்தல் பணியை புறக்கணிப்பதாக உள்ளாட்சி தேர்தல் பிரிவுக்கு மனு அளித்தனர். இந்த சம்பவம் ஊட்டியில் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கூடலூர்
கூடலூரில் ஆர்.டி.ஓ, தாலுகா அலுவலக ஊழியர்கள் மற்றும் வட்ட வழங்கல், நில அளவை உள்பட அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு தாலுகா அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக வருவாய் துறை அரசு அலுவலகங்கள் மூடப்பட்டது. இதனிடையே வருவாய்த் துறையினரின் திடீர் போராட்டத்தால் அலுவலகப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் அலுவலகங்களுக்கு வந்த பொதுமக்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.