பச்சை வர்ணம் பூசப்பட்ட படகுகளுக்கு டீசல் மானியம்: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத்
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-;
செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி மற்றும் சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்தல் சட்டப்படி குற்றமாகும். இதனால் கடலில் மீன்வளம் அழிந்துவிடும் அபாயம் உள்ளது. இதை மீறும் பட்சத்தில் தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறைபடுத்தும் சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அனைத்து மீன்பிடி படகுகளிலும் பதிவு எண் தெளிவாக எழுதி இருக்க வேண்டும்.
அதேபோல் அனைத்து விதமான மீன்பிடி படகுகளையும் பதிவு செய்த பிறகே கடலுக்கு மீன்பிடிக்க கொண்டு செல்லவேண்டும். எனவே, பதிவு செய்யப்படாத மீன்பிடி படகுகளை உடனே மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் பதிவுசெய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதேபோல் காப்பீடு செய்யப்பட்ட படகுகளுக்கு மட்டுமே மானிய விலையிலான டீசல் வழங்கப்படும். எனவே உரிமம் முடிவுற்று இருந்தால், உடன் மீன்பிடி உரிமத்தினை புதுப்பித்திட வேண்டும். மேலும் அனைத்து விதமான படகுகளுக்கும் பச்சைநிற வர்ணம் மட்டுமே பூசப்பட வேண்டும். மேலும் பச்சை நிறவர்ணம் பூசப்பட்ட படகுகளுக்கு மட்டுமே மானிய விலையில் டீசல் வழங்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.