தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ 7 லட்சம் நகை பணம் திருட்டு
போத்தனூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.7 லட்சம் நகை மற்றும் பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.;
போத்தனூர்
போத்தனூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.7 லட்சம் நகை மற்றும் பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தனியார் நிறுவன ஊழியர்
கோவையை அடுத்த போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 52). இவர் அங்குள்ள தனியாா நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் வழக்கம்போல வேலைக்கு சென்றார்.
இவருடைய மனைவி மற்றும் மகள் ஆகியோர் வீட்டை பூட்டி விட்டு அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர். பின்னர் ரவிச்சந்திரன் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
நகை, பணம் திருட்டு
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் வெளியே சிதறி கிடந்தன. அதில் இருந்த 20 பவுன் நகை, 65 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.20 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை. அவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
திருடப்பட்ட நகை மற்றும் பொருட்களின் மதிப்பு ரூ.7 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்பேரில் போத்தனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விசாரணை நடத்தினார்கள். அத்துடன் கைவிரல் ரேகை நிபுணர்களும் அங்கு வந்து பதிவான ரேகைகளை பதிவு செய்தனர்.
வலைவீச்சு
மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் மர்ம ஆசாமிகள் உருவம் பதிவாகி உள்ளதா என்பதை கண்காணித்து வருகிறார்கள். அத்துடன் அந்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
பட்டப்பகலில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் கொள்ளை நடந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.