அண்ணனின் கொலைக்கு பழி வாங்க மோட்டார் சைக்கிள் திருட்டு - 6 பேர் கைது

அண்ணனின் கொலைக்கு பழி வாங்க மோட்டார் சைக்கிள் திருடியதாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2022-02-02 13:34 IST
வண்டலூர்,

தாம்பரம் மாநகர போலீஸ் ஆணையகத்தின் எல்லைக்குட்பட்ட மறைமலை நகர் பகுதியில் அடிக்கடி மோட்டார் சைக்கிள் திருட்டு போகும் சம்பவம் நடைபெற்று வந்தது. இதனையடுத்து மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை பிடிப்பதற்காக தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் ரவி உத்தரவின் பேரில் மறைமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துசாமி தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் தனிப்படை போலீசார் மறைமலைநகர் டான்சி பஸ் நிறுத்தம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக 3 மோட்டார் சைக்கிளில் வந்த 6 வாலிபர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர்கள் 6 பேரும் முன்னுக்கு பின் முரணான தகவல்களை அளித்தனர். இதனையடுத்து 6 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்த போது அவர்கள் சென்னை சோழிங்கநல்லூர் அருகே உள்ள செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த சேட்டு என்கிற பாலாஜி (வயது 23), அவருடைய நண்பர்களான ஹரி ஷங்கர் ( 21), செங்கல்பட்டு புலிப்பாக்கம் பகுதியை சேர்ந்த அருண்குமார் (21), சோழிங்கநல்லூர் பகுதியை சேர்ந்த அபிமன்யு ( 24), காரப்பாக்கம் பகுதியை சேர்ந்த தினேஷ் ( 24), ஷியாம் குமார் ( 25) என்பது தெரியவந்தது. மேலும் நடத்தப்பட்ட விசாரணையில் பாலாஜியின் அண்ணன் கருப்பு வடிவழகன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னை சேத்துப்பட்டு பகுதியில் ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தனது அண்ணனை கொலை செய்த கும்பலை பழி வாங்கும் எண்ணத்தில் அவர்களை கொலை செய்ய பயன்படுத்துவதற்காக நண்பர்களுடன் சேர்ந்து மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 6 பேரையும் கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களிடமிருந்து 3 மோட்டார் சைக்கிள்கள், 2 பட்டாக்கத்தி போன்றவற்றை போலீசார் கைப்பற்றினர்.

மேலும் செய்திகள்