விஷமருந்து தடவிய கேரட்டை சாப்பிட்ட மாணவி பலி

நெகமம் அருகே எலி தொல்லையை கட்டுப்படுத்த வைக்கப்பட்ட விஷ மருந்து தடவிய கேரட்டை எடுத்து சாப்பிட்ட மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.;

Update:2022-02-02 22:38 IST
நெகமம்

நெகமம் அருகே எலி தொல்லையை கட்டுப்படுத்த வைக்கப்பட்ட  விஷ மருந்து தடவிய கேரட்டை எடுத்து சாப்பிட்ட மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

கல்லூரி மாணவி

நெகமம் அருகே உள்ள செங்குட்டைப்பாளையத்தை சேர்ந்தவர் தேவசித்து (வயது 55) இவர் சென்னையில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருடைய மனைவி கிரேஷி அம்மா (52). இவர்களுக்கு எனிமா ஜாக்குலின் (19), பிராங்குலின் (16) ஆகியோர் இருந்தனர். 

இதில் எனிமா ஜாக்குலின் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கிரேஷி அம்மா, செங்குட்டைபாளையத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடைக்கு பின்புறம் அவர்களின் வீடு உள்ளது. 

கேரட் சாப்பிட்டார்

இந்த நிலையில் கடந்த 31-ந் தேதி வீட்டில் இருந்த எனிமா ஜாக்குலின் தனது தாயிடம் பசிக்கிறது ஏதாவது சமைத்து தாருங்கள் என்று கேட்டு உள்ளார். அதற்கு அவர் நூடுல்ஸ் சமைத்து சாப்பிடு என்று கூறி உள்ளார்.

இதையடுத்து கடையில் இருந்து நூடுல்ஸ் பாக்கெட்டை எடுத்துச்சென்ற எனிமா ஜாக்குலின் அதை சமைத்துக்கொண்டு இருந்தார். இதற்காக வீட்டில் இருந்த 3 கேரட்டுகளை எடுத்தார். அதில் ஒரு கேரட்டை எடுத்து சாப்பிட்டார். 

விஷ மருந்து

பின்னர் சிறிது நேரத்தில் அவர் வாந்தி எடுத்தார். அத்துடன் வயிறு வலிக்கிறது என்று தனது தாயிடம் கூறினார். எதற்கு வயிறு வலிக்கிறது என்று கிரேஷி அம்மா கேட்டபோது சமையலறையில் இருந்த 3 கேரட்டுகளில் ஒன்றை எடுத்து சாப்பிட்டதாக கூறினார். 

அந்த கேரட் எலித்தொல்லையை கட்டுப்படுத்த விஷமருந்து தடவியது என்பதும், அது தெரியாமல் அதை எனிமா ஜாக்குலின் சாப்பிட்டதால் அதிர்ச்சி அடைந்த கிரேஷி அம்மா, பதறியடித்த படி தனது மகளை பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 

பரிதாப சாவு

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி எனிமா ஜாக்குலின் பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த சம்பவம் குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். எலி தொல்லையை கட்டப்படுத்த விஷமருந்து தடவி வைத்த கேரட்டை தெரியாமல் எடுத்து சாப்பிட்ட கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்