தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-;
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
நடைபாதை அமைக்க வேண்டும்
கோத்தகிரி கிளை நூலகம் முதல் கால்டக்ஸ் வரை இன்டர்லாக் கற்கள் பதித்து சாலை அமைப்பதற்காக அங்கு அமைக்கப்பட்டு இருந்த கான்கிரீட் நடைபாதை அகற்றப்பட்டது. தற்போது சாலைப் பணிகள் முடிந்துவிட்டது. ஆனால் இன்னும் அங்கு நடைபாதை அமைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அங்கு உடனடியாக நடை பாதை அமைக்க வேண்டும்.
பாபு, கோத்தகிரி.
அடிக்கடி பழுது
கிணத்துக்கடவு தாலுகா அலுவலக வளாகத்தில் டிரான்ஸ் பார்மர் உள்ளது. இதில் அடிக்கடி பழுது ஏற்படுவதால் தீப்பிடித்து வருகிறது. இதனால் இங்கு வந்து செல்லும் பொது மக்கள் பயத்துடன் வரக்கூடிய நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து, டிரான்ஸ்பார்மர் அடிக்கடி பழுதாவதை தடுக்க அதில் உள்ள குறைகளை சரிசெய்ய வேண்டும்.
சிவகுமார், கிணத்துக்கடவு.
தினத்தந்தி செய்தி எதிரொலி:
திறந்தவெளி தொட்டிகள் மூடப்பட்டது
கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி முன்பு குடிநீர் குழாய்களை இணைக்கக்கூடிய திறந்தவெளி தொட்டிகள் சாலையோரம் உள்ளது. இவை மூடாமல் இருந்ததால் அதற்குள் பலர் தவறி விழுந்து வந்தனர். இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன்பயனாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த திறந்தவெளி தொட்டிகளை மூடி உள்ளனர். எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி.
சந்திரன், கூடலூர்.
கோழிக்கழிவுகளால் அவதி
கோவை பாப்பம்பட்டியில் இருந்து இடையர்பாளையம் செல்லும் சாலையின் ஓரத்தில் கோழிக்கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்த வழியாக செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. இது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதன் காரணமாக இந்த வழியாக செல்பவர்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அங்குள்ள கழிவுகளை அகற்றுவதுடன், கோழிக்கழிவுகளை கொட்டுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோபி, பாப்பம்பட்டி.
மூடியிருக்கும் மைதானம்
கோவை மாநகராட்சி 100-வது வார்டு கணேசபுரம் மூரண்டம்மன் கோவில் பகுதியில் எம்.ஜி.ஆர். பூப்பந்து விளை யாட்டு மைதானம் உள்ளது. இது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் மூடப்பட்ட நிலையில் காணப்படுகிறது. இது குறித்து அதிகாரிகளை சந்தித்து புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இளைஞர்கள் தங்களின் விளையாட்டு திறனை வெளிப்படுத்த முடியவில்லை. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த மைதானத்தை உடனடியாக திறக்க வேண்டும்.
சந்திரன், கணேசபுரம்.
குவிந்து கிடக்கும் குப்பைகள்
தொண்டாமுத்தூர் பேரூராட்சியில் தெருக்களில் குப்பைகள் போட குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன. அவை அனைத்தும் மிகவும் சிறியதாக இருக்கிறது. இதனால் தொட்டி விரைவில் நிரம்பி, குப்பைகள் கீழே சிதறி விழுகிறது. இதன் காரணமாக அங்கு குப்பைகள் குவிந்து கிடப்பதால் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாய நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பெரிய அளவிலான குப்பை தொட்டிகளை வைக்க வேண்டும். இல்லை என்றால் உடனடியாக குப்பைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
சுப்பிரமணியம், தொண்டாமுத்தூர்.
படகு சவாரி தொடங்குமா?
சூலூர் பெரியகுளத்தில் படக சவாரி நடந்து வந்தது. தற்போது இந்த சவாரி திடீரென்று நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் இங்கு வரும் பொதுமக்கள் படகு சவாரி செய்ய முடியாமல் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. அத்துடன் அங்கு போடப்பட்டு உள்ள படகுகளும் பழுதடைந்து வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து படகு சவாரி மீண்டும் செயல்பட வழிவகை செய்ய வேண்டும்.
மணிகண்டன், சூலூர்.
அகற்றப்படாத கழிவுகள்
கோவை சிங்காநல்லூர் அரவான் கோவில் அருகே ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை அருகே சாக்கடை கால்வாய் செல்கிறது. அந்த கால்வாய் சுத்தம் செய்யப்பட்டு கழிவுகள் வெளியே எடுத்து வைக்கப்பட்டது. ஆனால் பல நாட்கள் ஆகியும் அந்த கழிவுகள் அகற்றப்படவில்லை. இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதால் இங்கு வந்து செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து கழிவுகளை அகற்ற வேண்டும்.
வெங்கடேஷ், சிங்காநல்லூர்.
மூடப்பட்ட கழிவறை
கோவை உப்பிலிபாளையம் காந்தி நகர் பகுதியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக கழிவறை கட்டப்பட்டு உள்ளது. ஆனால் இந்த கழிவறை முறையாக சுத்தம் செய்யப் படுவது இல்லை. இதனால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதால் பூட்டப்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து, இந்த கழிப்பிடத்தை திறந்து முறையாக பராமரிக்க வேண்டும்.
பக்தவச்சலம், உப்பிலிபாளையம்.
குப்பைகளால் ஆபத்து
கோவை சிறுவாணி ரோட்டில் உள்ள காருண்யா நகர் பகுதியில் சாலையின் ஓரத்தில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. அவற்றை கால்நடைகள் சாப்பிடுவதால் உயிரிழக்கும் அபாய நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து அங்கு கொட்டப்பட்டு உள்ள கழிவுகளை உடனடியாக அகற்றுவதுடன், பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரன்வீர்வர்சன், காருண்யாநகர்.