பேரூரில் அ.தி.மு.க. பிரமுகரிடம் ரூ.3 லட்சம் பறிமுதல்
கோவை பேரூரில் அ.தி.மு.க. பிரமுகர் ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.3 லட்சத்தை பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.;
பேரூர்
கோவை பேரூரில் அ.தி.மு.க. பிரமுகர் ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.3 லட்சத்தை பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
அ.தி.மு.க. பிரமுகர்
தொண்டாமுத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட புத்தூர் பகுதியில் போளுவாம்பட்டி செல்லும் சாலையில் தனி தாசில்தார் கல்பனா அலமேலு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகசாமி ஆகியோர் அடங்கிய பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி விசாரணை நடத்தினர். இதில், அவர் உரிய ஆவணங்களின்றி ரூ.3 லட்சத்தை கொண்டு சென்றது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் தென்னமநல்லூர் ஜல்லிக்குழி வீதியைச் சேர்ந்த உலகநாதன் (வயது 42) என்பதும்,
அவர் தென்னமநல்லூர் ஊராட்சியில் 5-வது வார்ட்டில் அ.தி.மு.க. கவுன்சிலராகவும் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து, தொண்டாமுத்தூர் பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் ரமேஷிடம் ஒப்படைத்தனர்.
காரமடை
காரமடை நகராட்சிக்கு உட்பட்ட ரயில்வே மேம்பாலம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ராமச்சந்திரன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் அடங்கிய குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில், காரில் வந்த சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த கந்தவடிவேல் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.3 லட்சத்து 51 ஆயிரத்து 500-யை கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து காரமடை நகராட்சி தேர்தல் அலுவலர் பால்ராஜிடம் ஒப்படைத்தனர்.
இதேபோல வெள்ளலூரில் பறக்கும் படை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போத ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.