பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர் கைது
பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர் கைது;
கோவை
கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையத்தை சேர்ந்தவர் 26 வயது பெண். இவர் தனது கணவரை பிரிந்து குழந்தையுடன் வசித்து வருகிறார். மேலும் அந்த பெண் ஒரு ஆஸ்பத்திரியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அதே ஆஸ்பத்திரியில் காவலாளியாக பணியாற்றி வந்த ஹரிகுமார் (வயது 32) என்பவருடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது.
அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. ஹரிகுமாருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. இந்த நிலையில் ஹரிகுமாரின் நடவடிக்கை பிடிக்காததால் அந்த பெண் அவரிடம் பேசுவதையும், பழகுவதையும் நிறுத்தினார். இதனால் வேதனையடைந்த அடைந்த அவர் கடந்த 31-ந் தேதி ஆஸ்பத்திரி அருகே நின்ற அந்த பெண்ணிடம் சென்று தன்னிடம் பேசுமாறு கூறினார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த ஹரிகுமார் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து அந்த பெண்ணை குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் பெண்ணை கத்தியால் குத்திய ஹரிகுமாரை கைது செய்தனர்.