நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு துப்பாக்கி வைத்திருப்பவர்கள் போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும்: ஆவடி போலீஸ் கமிஷனர்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு துப்பாக்கி வைத்திருப்பவர்கள் போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும் என ஆவடி போலீஸ் கமிஷனர் அறிவுறுத்தியுள்ளார்.

Update: 2022-02-03 10:27 GMT
மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளபடி ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் எல்லைக்குட்பட்ட ஆவடி மாநகராட்சி, திருநின்றவூர், பூந்தமல்லி, திருவேற்காடு, மாங்காடு ஆகிய நகராட்சிகள், திருமழிசை, நாரவாரிகுப்பம், மீஞ்சூர் ஆகிய பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள தேர்தல் நடத்தை வழிகாட்டு விதிமுறைகளின்படி சுமூகமாக தேர்தல் நடைபெற 8 போலீஸ் உதவி கமிஷனர்கள் தலைமையில் சுமார் 500 போலீசார் 10 வேட்புமனு தாக்கல் செய்யும் மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மாநகராட்சியில் ஆயிரத்து 437 வாக்குச் சாவடிகளில் பிரச்சினைக்குரிய 71 மையங்கள் கண்டறியப்பட்டு அங்கு 4 ஆயிரம் போலீசார் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

பணப்பட்டுவாடா நடக்காமல் கண்காணிக்க 12 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆவடி மாநகராட்சியில், உரிமம் பெற்று துப்பாக்கிகள் வைத்திருக்கும் 200 நபர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும் என ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் செய்திகள்