பனையூர் குப்பம் கடற்கரையில் மர்ம பொருள் கரை ஒதுங்கியதால் பரபரப்பு
பனையூர் குப்பம் கடற்கரையில் மர்ம பொருள் கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.;
சென்னையை அடுத்த நீலாங்கரை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூர் குப்பம் கடற்கரை பகுதியில் சுமார் 10 அடி நீளம், 4 அடி அகலமும், சுமார் 2 டன் எடையும் கொண்ட சிகப்பு நிற பெரிய உருளை ஒன்று சங்கிலியுடன் கரை ஒதுங்கி இருந்தது. அந்த மர்ம பொருளை கண்ட அப்பகுதி மீனவர்கள், அதனை கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் இதுபற்றி கானத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மர்ம பொருளை கைப்பற்றி விசாரித்தனர். இது குறித்து கடலோர பாதுகாப்பு படைக்கும் போலீசார் தகவல் கொடுத்தனர்.
கரை ஒதுங்கிய அந்த உருளை, கடல் மிதவை என்றும், கப்பல்களை நிலை நிறுத்த அவை பயன்படுத்தப்படும் எனவும் தெரிகிறது. ஏதேனும் கப்பலில் இருந்து சங்கிலி தானாக துண்டிக்கப்பட்டு அலையில் அடித்து வரப்பட்டு பனையூர் பகுதியில் கரை ஒதுங்கி இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
பனையூர் குப்பம் கடற்கரையில் மர்மபொருள் கரை ஒதுங்கி இருப்பதாக தகவல் பரவியதால் அங்கு அப்பகுதி மக்கள் திரண்டு வந்து மர்ம உருளையை ஆச்சர்யத்துடன் பார்த்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.