கோவையில் அரசு பஸ் மோதி தந்தை மகன் பலி

கோவையில் மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு அழைத்து சென்றபோது தவறி விழுந்ததில் அரசு பஸ்மோதி தந்தை-மகன் உயிரிழந்தனர். 4 வயது சிறுவனுக்கு படுகாயம் ஏற்பட்டது.;

Update:2022-02-04 22:16 IST
கோவை

கோவையில் மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு அழைத்து சென்றபோது தவறி விழுந்ததில் அரசு பஸ்மோதி தந்தை-மகன் உயிரிழந்தனர். 4 வயது சிறுவனுக்கு படுகாயம் ஏற்பட்டது. 

தனியார் நிறுவன ஊழியர்

கோவை சிங்காநல்லூர் லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெபஸ்டின் சாமுவேல் (வயது 40). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது மகன்கள் பிரின்ஸ் கிளாட்வின் (8), பிராங்கிளின் (4). ஒண்டிப்புதூரில் உள்ள ஒரு பள்ளியில் பிரின்ஸ் கிளாட்வின் 3-ம் வகுப்பும், பிராங்கிளின் யு.கே.ஜி.யும் படித்து வந்தனர். 

இந்த நிலையில் ஜெபஸ்டின் சாமுவேல் தனது 2 மகன்களை பள்ளியில் கொண்டு விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் அழைத்துச்சென்றார். அவர் மோட்டார் சைக்கிளை ஓட்ட பிரின்ஸ் கிளாட்வின் பின்பக்கமும், பிராங்கிளின் முன்பக்க பெட்ரோல் டேங் மீதும் அமர்ந்து இருந்தனர். 

தந்தை-மகன் பலி

அவர்கள் கோவை-திருச்சி சாலையில் உள்ள ஒரு தியேட்டர் அருகே வந்தபோது திடீரென்று மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்தது. இதனால் ஜெபஸ்டின் சாமுவேல், பிரின்ஸ் கிளாட்வின் ஆகியோர் வலதுபக்கமும், பிளாங்கிளின் இடதுபுறமும் விழுந்தனர். 

அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் தந்தை-மகன் மீது மோதியது. இதனால் பஸ் சக்கரத்தில் சிக்கிய ஜெபஸ்டின் சாமுவேல், பிரின்ஸ் கிளாட்வின் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

சிறுவன் படுகாயம்

உடனே அக்கம் பக்கத்தை சேர்ந்தவர்கள் ஓடி வந்து படுகாயத்து டன் உயிருக்கு போராடிய பிராங்கிளினை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் அவர்கள் விபத்தில் உயிரிழந்த ஜெபஸ்டின் சாமுவேல், பிரின்ஸ் கிளாட்வின் ஆகியோர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

போலீஸ் விசாரணை

மேலும் இந்த விபத்து குறித்து கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவையில் அரசு பஸ் மோதியதில் தந்தை-மகன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியை சேர்ந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 

மேலும் செய்திகள்