கோவை
கோவை -திருச்சி ரோடு சுங்கத்தில் இருந்து உக்கடம் செல்லும் பைபாஸ் சாலையில் உள்ள ஒரு மோட்டார் விற்பனை நிலையம் அருகே முட்புதருக்குள் இருந்து துர்நாற்றம் வீசியது. உடனே அங்கிருந்தவர்கள் சென்று பார்த்த போது அழுகிய நிலையில் பெண் பிணம் கிடந்தது.
இது குறித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் போலீசார் விரைந்து வந்து பெண் பிணத்தை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிணமாக கிடந்த பெண்ணுக்கு 45 வயது இருக்கும். ஆனால் அவர் யார்?. எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.
இது குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில், பிணமாக கிடந்த பெண் திருச்சி ரோடு சிக்னல்களில் பிச்சை எடுத்து வாழ்ந்துள்ளார். அந்த பெண் வயிறு வீங்கிய நிலையில் இருந்துள்ளது. இதனால் அவர் கர்ப்பிணி பெண்ணாக இருக்கலாம் என்றும், அவரை யாராவது பலாத்காரம் செய்யும் முயற்சியில் கொலை செய்து, உடலை முட்புதரில் வீசி சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) அந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு தான் அவர் கர்ப்பமாக இருந்தாரா? உடலில் வேறு காயங்கள் உள்ளதா? என்பது தெரியவரும் அழுகிய நிலையில் பெண் பிணம் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.