வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆண் கரடி சாவு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆண் கரடி திடீரென உயிரிழந்ததாக பூங்கா நிர்வாகம் தெரிவித்தது.

Update: 2022-02-06 10:09 GMT
வண்டலூர் உயிரியல் பூங்கா

சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் உள்பட 75 பேருக்கு கடந்த மாதம் கொரோனா தொற்று உறுதியானது. இதனால் கடந்த மாதம் 17-ந்தேதியிலிருந்து பிப்ரவரி 2-ந்தேதி வரை வண்டலூர் உயிரியல் பூங்கா, பார்வையாளர்களுக்கு தடை செய்யப்பட்டு மூடப்பட்டிருந்தது.

இதற்கிடையே வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கங்கள், புலிகள், சிறுத்தைகள் ஆகிய விலங்குகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இல்லை என்பது உறுதியானது. இதையடுத்து கடந்த 3-ந்தேதி முதல் வண்டலூர் உயிரியல் பூங்கா மீண்டும் திறக்கப்பட்டு, பொதுமக்கள் பார்க்க அனுமதிக்கப்பட்டது.

இமாலயா கரடி பலி

இந்தநிலையில் வண்டலூர் உயிரியல் பூங்கா சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த சுமார் 24 வயதுடைய ஜான், ஹிமாலயன் கரடி சர்க்கசிலிருந்து மீட்கப்பட்டு கடந்த 2004-ல் வண்டலூர் கொண்டு வரப்பட்டது. உயரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டபோதே அதற்கு 2 கண்களிலும் பார்வை குறைபாடு இருந்தது.

இந்த நிலையில் ஜான் ஹிமாலயன் கரடிக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த 2 மாதங்களாக உயிரியல் பூங்கா டாக்டர்களால் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. கடந்த 2 நாட்களாக அதன் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில், உயிரியல் பூங்கா மருத்துவக்குழு தீவிர சிகிக்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று இமாலயா கரடி பரிதாபமாக உயிரிழந்தது.

கொரோனாவால் சாவா?

அதன் பிறகு உயிரியல் பூங்கா டாக்டர்கள் மற்றும் கால்நடை பல்கலைகழக மருத்துவ குழுவினரால் கரடியின் உடல் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை முடிவு வந்த பின்னரே கொரோனா தொற்றால் கரடி இறந்ததா? அல்லது உடல் நலக்குறைவால் இறந்ததா? என்பது தெரியவரும்.

மேலும் செய்திகள்