சவுந்தர்ய நாயகி உடனுறை நந்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா

செங்கல்பட்டு நந்திவரம் பழமை வாய்ந்த சவுந்தர்ய நாயகி உடனுறை நந்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.;

Update:2022-02-07 19:28 IST
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கிராமத்தில் பழமை வாய்ந்த சவுந்தர்ய நாயகி உடனுறை நந்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் கோவிலில் உள்ள சவுந்தர்ய நாயகி அம்பாள் உடனுறை நந்தீஸ்வரர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும், சொர்ணாகர்ஷண பைரவர், நால்வர் மற்றும் 63 நாயன்மார்கள் தொகையடியார்கள் ஏனைய மூர்த்திகளுக்கும் ஆகம விதிப்படி திருப்பணிகள் நடைபெற்றது.

இதனையடுத்து அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி கடந்த 4-ந்தேதி கணபதி ஹோமம், கோ பூஜை, நவக்கிரக ஹோமம் உள்பட 4 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. நேற்று காலை நந்தீஸ்வருக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்றன. இதனைத்தொடர்ந்து கோவில் கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அதன் பின்னர் புனிதநீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டு, அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதனையடுத்து மாலை திருக்கல்யாணமும், பஞ்ச மூர்த்திகள் வாண வேடிக்கையுடன் சாமி திருவீதி உலா நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவில் நந்திவரம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான சிவ பக்தர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், நந்திவரம் கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்