வால்பாறை அருகே பிடிபட்ட புலி குட்டிக்கு வேட்டை பயிற்சி
வால்பாறை அருகே பிடிபட்ட புலி குட்டிக்கு வேட்டை பயிற்சி அடுத்த மாதம் அளிக்கப்படுகிறது.;
பொள்ளாச்சி
வால்பாறை அருகே பிடிபட்ட புலி குட்டிக்கு வேட்டை பயிற்சி அடுத்த மாதம் அளிக்கப்படுகிறது.
புலிகுட்டி பிடிபட்டது
வால்பாறை அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் தலைமுடி எஸ்டேட் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி உடல்சோர்வுடன் 1 வயதான புலி குட்டி கிடந்தது. அதை வனத்துறை யினர் பிடித்தனர். அந்த குட்டி புலிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு மானாம்பள்ளி பகுதியில் பராமரரிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே இந்த புலி குட்டியை சென்னையில் உள்ள வண்டலூர் மிருககாட்சி சாலைக்கு அனுப்ப திட்டமிடப்பட்டது. பிறகு அந்த முடிவு கைவிடப்பட்டது.
இந்த நிலையில் ஆனை மலை புலிகள் காப்பக இயக்குனரும், கோவை மண்டல வன பாதுகாவலருமான ராமசுப்பிரமணியம் ஏற்பாட்டின்படி தற்போது புலி குட்டிக்கு மானாம்பள்ளி வனப்பகுதியிலேயே வேட்டையாட பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
வேட்டையாட பயிற்சி
பிடிபட்ட புலி குட்டிக்கு வனப்பகுதியிலேயே வேட்டை பயிற்சி தமிழகத்தில் முதல்முறையாக வால்பாறையில் அளிக்கப்பட உள்ளது. இதற்காக ரூ.75 லட்சம் செலவிடப்படுகிறது.
ஒரு ஹெக்டேரில் அடர்ந்த வனப்பகுதியில் இடம் தேர்வு செய்யபட்டு 15 அடி உயரத்துக்கு கம்பிவேலி அமைக்கப்பட உள்ளது. மேலும் அங்கு சுழலும் கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிக்கப்பட உள்ளது.
அத்துடன் வனக்காவலர்கள் புலியை போல் உடை அணிந்து அந்த பகுதியை கண்காணிப்பார்கள். மனித வாைடயை கண்டால் புலி குட்டியின் சுபாவம் மாறும் என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
அடுத்த மாதம்
தினமும் ஒவ்வொரு விலங்குகளாக வேட்டையாட விடப்படும். மொத்தம் 50 விலங்குகளை வேட்டையாட அந்த புலி குட்டி தயாரானதும் ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் விடப்படும்.
இதற்கான ஆரம்பகட்ட பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. அடுத்த மாதம் முதல் புலி குட்டிக்கு அதன் பகுதியிலேயே வேட்டையாட பயிற்சி அளிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.