பொள்ளாச்சியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு

பொள்ளாச்சியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.;

Update:2022-02-09 23:40 IST
பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

பொள்ளாச்சி நகராட்சி

பொள்ளாச்சி நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. இங்கு ஆண் வாக்காளர்கள் 39 ஆயிரத்து 543 பேரும், பெண் வாக்காளர்கள் 42 ஆயிரத்து 777 பேர், 3-ம் பாலினத்தவர் 33 பேர் என மொத்தம் 82 ஆயிரத்து 353 வாக்காளர்கள் உள்ளனர். 

இவர்கள் வரும் 19-ந் தேதி நடக்கும் நகராட்சி தேர்தலில் வாக்களிக்க வசதியாக 89 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்களுக்கு தேவையான வசதிகளை செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. 

கலெக்டர் ஆய்வு

வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பொள்ளாச்சியில் உள்ள என்.ஜி.எம். கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்படுகிறது. 

அங்கு வைத்துதான் வாக்குகள் எண்ணப் படுகின்றன. எனவே அங்கு அதற்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் பொள்ளாச்சி வந்தார். 

பின்னர் அவர் வாக்குப்பதிவு எண்ணும் மையமான என்.ஜி.எம். கல்லூரிக்கு சென்று ஆய்வு செய்தார். 

பாதுகாப்பு ஏற்பாடுகள்

அங்கு செய்யப்பட்டு உள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்பட பல்வேறு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அத்துடன் தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

இந்த ஆய்வின்போது பொள்ளாச்சி சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ், பொள்ளாச்சி நகராட்சி தேர்தல் நடத்தும் அதிகாரி தாணுமூர்த்தி, தாசில்தார் அரசகுமார், போலீஸ் துணை சூப்பிரண்டு தமிழ்மணி உள்பட பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்