ரூ.2 கோடியில் புதிய கட்டிடம் கட்டும் பணி தொடக்கம்
பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அலுவலகத்துக்கு ரூ 2 கோடியில் புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.;
பொள்ளாச்சி
பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அலுவலகத்துக்கு ரூ.2 கோடியில் புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
தெற்கு ஒன்றிய கட்டிடம்
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்ட தெற்கு ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் 26 கிராம ஊராட்சிகள் உள்ளன. ஒன்றிய அலுவலகத்தில் பொது பிரிவு, என்ஜினீயர் பிரிவு, வட்டார வளர்ச்சி அலுவலர், ஆணையாளர் ஆகியோருக்கு தனி அறைகள் உள்ளன. ஒன்றிய அலுவலகத்துக்கு கட்டிடம் கட்டி 50 ஆண்டுகளுக்கு மேல்ஆவதால் கட்டிடம் மிகவும் பழுதடைந்து காணப்பட்டது.
பழைய கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்டிடம் கட்டப்பட உள்ளது. கட்டிட பணிகள் தொடங்க உள்ளதால் ஒன்றிய அலுவலகம் தற்காலிகமாக அம்மா திருமண மண்டபத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு, பழைய கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது. ஒன்றிய அலுவலக வளாகத்தில் இருந்த வேளாண்மை துறை அலுவலக கட்டிடத்தை காலி செய்ய தாமதமானதால் புதிய அலுவலகம் கட்டுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக நிதி ஒதுக்கியும் பணிகளை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது.
ஒராண்டிற்குள் பணிகளை முடிக்க திட்டம்
நீண்ட போராட்டத்திற்கு பிறகு வடக்கு ஒன்றிய அலுவலக வளாகத்தில் தெற்கு ஒன்றிய வேளாண்மை துறைக்கு தற்காலிகமாக பழைய கட்டிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை அலுவலக கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன. இதையடுத்து தெற்கு ஒன்றிய அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. சில இடங்களில் பாறைகள் இருப்பதால், அதை உடைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இதுகுறித்து தெற்கு ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது:- தெற்கு ஒன்றிய அலுவலகத்துக்கு ரூ.2 கோடியே 75 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டப்படுகிறது. வேளாண்மை துறை அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டதால், பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. அலுவலகத்தின் முதல் தளத்தில் ஒன்றிய குழு தலைவர், ஆணையாளர், பொது பிரிவு, கூட்டரங்கு உள்ளிட்டவை கட்டப்படுகிறது. 2-வது தளத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) மற்றும் கூட்டரங்கு, கழிப்பிட வசதி போன்றவை ஏற்படுத்தப்படுகின்றன. பணிகளை ஒராண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.