மூதாட்டியிடம் நகை பறித்த 2 பேர் கைது
மூதாட்டியிடம் நகை பறித்த 2 பேர் கைது;
காரமடை
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள ஜெ.ஜெ.நகர்பகுதியை சேர்ந்தவர் சுலோக்சனா (வயது73).இவர் நேற்று காலை காரமடை ரெயில்வே மேம்பாலத்தின் கீழ்பகுதியில் நடந்து சென்றார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் சுலோக்சனாவை நோட்டமிட்டு பின் தொடர்ந்து சென்று அவரது கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க நகையை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.இது குறித்த புகாரின் பேரில் காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் முனுசாமி, செந்தில்குமார் மற்றும் போலீசார் தீவிர தேடுல் வேட்டை நடத்தினர்.
இதற்கிடையில் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு, நகையை பறித்து சென்ற இரண்டுபேரை பிடித்தனர். விசாரணையில், அவர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்த திலிப் (25), மற்றும் நீலகிரி மாவட்டம் ஊட்டி புது மந்து பகுதியை சேர்ந்த யூசுப் ( 43) என்பதும் தெரியவந்தது.
மேலும் இவர்கள் இருவரும் ஊட்டி, கோவை, திருப்பூர் பகுதியில் பல்வேறு திருட்டுகளில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மூதாட்டியிடம் நகை பறித்த சம்பவம் நடந்து 12 மணி நேரத்திற்குள் வழிப்பறி ஆசாமிகளை பிடித்து கைது செய்து நகையை மீட்ட போலீசாருக்கு உயர் போலீஸ் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.