மசினகுடி வனப்பகுதியில் தீ பரவாமல் தடுக்க தீ தடுப்பு கோடுகள் அமைப்பு

மசினகுடி வனப்பகுதியில் தீ பரவாமல் தடுக்க தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.

Update: 2022-02-17 15:34 GMT
கூடலூர்

மசினகுடி வனப்பகுதியில் தீ பரவாமல் தடுக்க தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. 

வனப்பகுதியில் வறட்சி 

கூடலூர் பகுதியில் ஜூன் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரை ஆண்டுதோறும் பருவமழை பெய்து வருகிறது. இக்காலகட்டத்தில் பாண்டியாறு, மாயாறு உள்ளிட்ட அனைத்து நீர் நிலைகளிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடும் என்பதால் முதுமலை புலிகள் காப்பக வனமும் பசுமையாக காணப்படும்.

ஆனால் டிசம்பர் மாதம் தொடங்கி மே மாதம் வரை பனி மற்றும் கோடைகாலமாக உள்ளதால் வறட்சியான காலநிலை நிலவுகிறது. தற்போது வனப்பகுதியில் வறட்சி தொடங்கி உள்ளதால் நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து குறைந்து வருகிறது
தீ தடுப்பு கோடுகள் 

அதுபோன்று முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் மசினகுடியில் உள்ள வனப்பகுதியில் வறட்சியின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் புல்வெளிகள் காய்ந்து வருவதால் எளிதில் தீ பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. 

எனவே வனப்பகுதியில் தீ விபத்து ஏற்படுவதை தடுக்க தெப்பக்காட்டில் இருந்து மசினகுடிக்கு செல்லும் சாலையின் இருபுறமும் தீதடுப்பு கோடுகள் அமைக்கும் பணியை வனத்துறையினர் தொடங்கி உள்ளனர். 

இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

400 கி.மீ. தூரம்

முதுமலை புலிகள் காப்பகத்தை சுற்றி 400 கி.மீ. சுற்றளவில் காட்டுத் தீ பரவாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் புலிகள் காப்பகத்தின் வெளிமண்டலத்தை சேர்ந்த மசினகுடி வனத்தில் 100 கி.மீட்டர் சுற்றளவில் தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டு வருகிறது. 

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்