அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் ஒரே அணியாகவே செயல்படுகிறார்கள்- முத்தரசன்

அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் ஒரே அணியாகவே செயல்படுகிறார்கள்

Update: 2022-02-17 15:48 GMT
நீடாமங்கலம்:-

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்தனியாக போட்டியிட்டாலும் அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் ஒரே அணியாகவே செயல்படுகிறார்கள் என தேர்தல் பிரசாரத்தின்போது முத்தரசன் கூறினார். 

முத்தரசன் பிரசாரம்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பிரசாரம் செய்தார். 
அப்போது அவர் பேசியதாவது:- 
கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை. இதனால் நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாகம் சீர்குலைந்து விட்டது. ஆட்சிக்கு வந்தால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவோம் என்று முதல்-அமைச்சர் ஸ்டாலின் சொன்னார். அதன்படி தேர்தல் நடக்கிறது. 

ஒரே அணியாக செயல்படுகிறார்கள்

அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நீர்நிலைகளை முறையாக தூர்வாரி பராமரிக்காததால், மழையால் சென்னை மாநகரம் பாதிக்கப்பட்டது. கடந்த ஆட்சி காலத்தில் ஏற்பட்ட சுமைகளை இன்றைய ஆட்சியாளர்கள் சுமந்து சீர்செய்கிறார்கள். மத்திய பட்ஜெட்டில் சாதாரண மக்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்படவில்லை. எனவே அது மக்களின் நலனை காக்கும் பட்ஜெட்டாக இல்லை. 
அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்தனியாக போட்டியிடுகிறார்கள். ஆனாலும் ஒரே அணியாகத்தான் செயல்படுகிறார்கள். 
அப்போது டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ., ஒன்றியக்குழுத்தலைவர் செந்தமிழ்ச்செல்வன், இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் பாரதிமோகன் உள்பட பலர் உடன் இருந்தனர். 

மன்னார்குடி 

மன்னார்குடி கீழப்பாலம் பகுதியில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடந்த பிரசார கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், ‘பா.ஜனதா நாட்டு நலனுக்கு எதிரான கட்சி. மக்களிடையே மதரீதியாக பிளவை ஏற்படுத்தி கலவரத்தை தூண்டுகிறது. அத்தகைய பா.ஜனதாவை ஆதரிப்பதன் மூலமாக அ.தி.மு.க.வும் மக்கள் நலனுக்கு எதிராக செயல்படுகிறது. ஆனால் தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி மக்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்படுகிறது. எனவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்’ என்றார். கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் டி.ஆர்.பி. ராஜா, மாரிமுத்து, இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம், தி.மு.க. நகர செயலாளர் வீராகணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்