காஞ்சீபுரத்தில் மோட்டார்சைக்கிள்- பஸ் மோதல்; டீ கடைக்காரர் சாவு
காஞ்சீபுரத்தில் மோட்டார்சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் டீ கடைக்காரர் பரிதாபமாக உயிரிழந்தார்.;
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் சங்குபாணி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 45). இவர் விளக்கொளி பெருமாள் கோவில் தெருவில் டீக்கடை நடத்தி வந்தார். இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். சக்திவேல் தனது டீக்கடையில் இருந்து தனது மனைவி லட்சுமியுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
தாலுகா அலுவலகம் அருகே சாலையை கடக்க முயன்றபோது, செங்கல்பட்டில் இருந்து காஞ்சீபுரம் நோக்கி வேகமாக வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் டீ கடைக்காரர் சக்திவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த அவரது மனைவி லட்சுமி சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து தகவலறிந்த சிவ காஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் சக்திவேலின் உடலை பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் சங்கர் (57) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.