செங்கல்பட்டு அருகே பாலம் சீரமைப்பு பணியால் கடும் போக்குவரத்து நெரிசல்

செங்கல்பட்டு அருகே பாலாற்று பாலம் சீரமைப்பு பணியால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Update: 2022-02-22 09:34 GMT
பாலம் சீரமைப்பு பணி

செங்கல்பட்டு அடுத்த இருக்குன்றம்பள்ளி-மாமண்டூர் இடையே பாலாற்றின் குறுக்கே உள்ள பாலம் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. சுமார் 2 மாதங்கள் இந்த பணி நடைபெறும் என தெரிகிறது.

இதனால் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வரும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது. எனவே சென்னை வருபவர்கள், சில கிலோ மீட்டர் தூரம் சுற்றி வரவேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

போக்குவரத்து நெரிசல்

சென்னையில் இருந்து திருச்சி செல்லும் வாகனங்கள் சென்னை-திருச்சி சாலையில் ஒரு வழி பாதையில் செல்கின்றன. ஒரு வழிப்பாதையில் 3 வரிசையாக வாகனங்கள் செல்கிறது. ஒரே நேரத்தில் அதிகளவிலான வாகனங்கள் வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனால் வாகனங்கள் ஊர்ந்தபடியே செல்கின்றன. இதனால் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதன் காரணமாக மாணவ-மாணவிகள், பணியாளர்கள் அவசரத்துக்கு செல்ல முடியாமல் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடந்தே செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சில நேரங்களில் இந்த போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் வாகனங்களும் சிக்கி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்