நெகமம்
கிணத்துக்கடவு, நெகமம், வடசித்தூர், மன்றாம்பாளையம், மெட்டுவாவி, பனப்பட்டி, செட்டியக்காபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதை பெற ரேஷன் கார்டுதாரர்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். ஆனால் கடந்த சில நாட்களாக ஏற்பட்டு உள்ள இணையதள கோளாறு காரணமாக விரைவாக பொருட்களை வினியோகிக்க முடியவில்லை.
இதனால் நீண்ட நேரம் காத்திருந்து அவதி அடையும் நிலை உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- ரேஷன் கடைகளில் அடிக்கடி இணையதள கோளாறு ஏற்படுவதால், பொருட்களை வாங்க கால் கடுக்க நீண்ட நேரம் காத்து நிற்க வேண்டி உள்ளது. மேலும் வேலைக்கு செல்ல முடிவது இல்லை. இதனால் பண இழப்பு, கால விரயம் ஏற்படுகிறது. எனவே இணையதள கோளாறை சரி செய்ய அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.