தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-;

Update:2022-02-24 21:12 IST
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:- 

போக்குவரத்து பாதிப்பு

ஊட்டியில் உள்ள தனியார் பள்ளி செல்லும் சாலையில் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகிறது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விட முடியாமல் நெரிசல் ஏற்பட்டு வருகின்றன. இதனால் சுற்றுலா பயணிகள், உள்ளூர் பொதுமக்கள் அவதி அடைகின்றனர். வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மணி, கோடப்பமந்து. 

சுகாதார சீர்கேடு

ஊட்டி பாபுஷா லைன் பகுதியில் பொதுமக்கள் திறந்தவெளியில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் கடும் துர்நாற்றம் வீசுவ தோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் உணவுக் கழிவுகளை தின்பதற்காக கால்நடைகள் உலா வருகின்றன. ஆகவே, திறந்தவெளியில் குப்பைகள் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சிவரஞ்சினி, எல்க்ஹில்.

ஆபத்தான மின்கம்பம்

கூடலூர் பி.எஸ்.என்.எல். அலுவகத்தின் முன்புறம் பழைய மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பம் பழுதடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் காற்று வேகமாக வீசும்போது மின்கம்பம் ஆடுகிறது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே விபத்துகள் ஏற்படுவதற்கு முன்பு இந்த ஆபத்தான மின்கம்பத்தை அகற்ற வேண்டும்.
சதிஷ்குமார், கூடலூர்.

வாகன ஓட்டிகள் அவதி

பொள்ளாச்சி-உடுமலை மெயின் ரோட்டில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு பல இடங்களில் இருந்து தினமும் ஏராளமானோர் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள். இதனால் இந்த ஆஸ்பத்திரி முன்பு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் போக்குவரத்தை சீரமைக்க போலீசார் யாரும் நியமிக்கப்படவில்லை. இதனால் தினமும் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து போக்குவரத்து நெரிசலை தடுக்க வேண்டும்.
ரவி, பொள்ளாச்சி. 

பழுதான சாலை

கோவை சிங்காநல்லூரில் இருந்து ஒண்டிப்புதூர் செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அத்துடன் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் பலர் விபத்தில் சிக்கி காயத்துடன் உயிர் தப்பிச்செல்லும் சம்பவமும் நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதான சாலையை சீரமைக்க வேண்டும்.
சக்திவேல், சிங்காநல்லூர்.

ஒளிராத தெருவிளக்குகள்

மேட்டுப்பாளையம் குரும்பனூரில் உள்ள பட்டத்தரசி அம்மன் கோவில் வீதி பகுதியில் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவை ஒளிருவது இல்லை. இதனால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் அந்த வழியாக செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் சாலையும் பழுதாகி இருப்பதால் இரவு நேரத்தில் சரியாக தெரிவது இல்லை. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதான விளக்குகளை ஒளிர செய்வதுடன் சாலையையும் சீரமைக்க வேண்டும். 
உதயகுமார், மேட்டுப்பாளையம்.

வேகத்தடை வேண்டும்

கோவை அருகே உள்ள வடவள்ளி-தொண்டாமுத்தூர் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதில் சில வாகனங்கள் அதிவேகமாகவும் செல்கிறது. இதனால் இந்த பகுதியை சேர்ந்தவர்கள் சாலையை கடந்து செல்ல முடிவது இல்லை. இதன் காரணமாக அடிக்கடி விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே குடியிருப்பு பகுதி இருக்கும் இடத்தில் சாலையில் வேகத்தடை அமைத்து விபத்துகள் நடப்பதை தடுக்க வேண்டும்.
லட்சுமி, வடவள்ளி. 

குண்டும்-குழியுமான சாலை

கோவை ரேஸ்கோர்ஸ் சாலை கடந்த சில மாதங்களாக குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. முக்கிய அரசு அதிகாரிகளின் குடியிருப்புகள் உள்ள இந்த பகுதியில் சாலை மிகவும் மோசமாக காட்சியளிப்பது பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அத்துடன் இந்த வழியாக செல்பவர்கள் விபத்தில் சிக்கி வருகிறார்கள். எனவே இந்த சாலையை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கதிர்வேல், புலியகுளம். 

தரையில் கிடக்கும் வழிகாட்டி பலகை

கோவை திருச்சி சாலை சுங்கம் ரவுண்டானா அருகே வழிகாட்டி பலகை வைக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த பலகை 2-ஆக உடைந்த நிலையில் தரையில் கிடக்கிறது. இதனால் இந்த வழிகாட்டி பலகை யாருக்கும் எவ்வித உபயோகமும் இல்லாமல் வீணாக கிடந்து வருகிறது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து அங்கு வைத்து பலருக்கும் வழிகாட்ட வழிவகை செய்ய வேண்டும்.
சுந்தரமூர்த்தி, கோவை. 

அடிக்கடி விபத்து 

கோவை ஹோப்காலேஜ் சிக்னலில் இருந்து மசக்காளிபாளையம் வரை உள்ள சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள பெரிதும் அவதியடைந்து வருகிறார் கள். அத்துடன் தினமும் விபத்து நடந்து வருவதால் பலர் காயத்துடன் தப்பிச்செல்லும் நிலை நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து அந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
சங்கீதா, மசக்காளிபாளையம்.

மேலும் செய்திகள்