சென்னையில் 2 மாதங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிந்த 585 மாடுகள் பிடிபட்டன

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சியின் சுகாதாரத்துறையின் சார்பில் 2 மாதங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிந்த 585 மாடுகள் பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு ரூ.9 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2022-02-28 10:04 GMT
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகள் பொது சுகாதாரத்துறை சார்பில் கால்நடை பிடிக்கும் வாகனங்கள் மூலம் பிடிக்கப்பட்டு, புதுப்பேட்டை மற்றும் பெரம்பூரில் உள்ள மாநகராட்சி மாட்டுத் தொழுவங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றது. மேலும் பிடிபடும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதமாக மாடு ஒன்றுக்கு ரூ.1,550 விதிக்கப்படுகிறது.

அதன்படி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சியின் சுகாதாரத்துறையின் சார்பில் கடந்த 26-ந்தேதி மட்டும் 21 மாடுகள் பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு ரூ.32 ஆயிரத்து 550 அபராதம் விதிக்கப்பட்டது. ஜனவரி மாதம் 287 மாடுகளும், பிப்ரவரி மாதம் 298 மாடுகளும் என 2 மாதங்களில் மொத்தம் 585 மாடுகள் பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு ரூ.9 லட்சத்து 6 ஆயிரத்து 750 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கோயம்பேடு 100 அடி சாலையில் சுற்றி திரிந்த மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து வாகனத்தில் ஏற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாட்டின் உரிமையாளரான அரும்பாக்கத்தை சேர்ந்த பார்த்தசாரதி (வயது 48) என்பவர் மாநகராட்சி ஊழியர் ஜான் (30) என்பவரிடம் தகராறு செய்து அவரை தகாத வார்த்தைகளால் பேசி மாட்டை அழைத்துச்சென்றார்.

இதுபற்றி கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பார்த்தசாரதியை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்