மாநகர பஸ்சை வழிமறித்து கேக் வெட்டி பஸ் தினம் கொண்டாடிய வழக்கில் 2 பேர் கைது

மாநகர பஸ்சை வழிமறித்து கேக் வெட்டி பஸ் தினம் கொண்டாடிய வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Update: 2022-02-28 10:12 GMT
சென்னை பெரம்பூர் பந்தர் கார்டன் பகுதியில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 20-க்கும் மேற்பட்டோர், பெரம்பூர்-மாதவரம் நெடுஞ்சாலையில் லட்சுமி அம்மன் கோவில் அருகே நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பிராட்வேயில் இருந்து கொடுங்கையூர் கவியரசர் கண்ணதாசன் நகர் நோக்கி சென்ற மாநகர பஸ்சை(தடம் எண் 64 கே) வழிமறித்தனர். பின்னர் பஸ்சின் மேற்கூரை மீது ஏறி பஸ்சுக்கு மாலை அணிவித்து, கேக் வெட்டி பஸ் தினம் கொண்டாடினர்.

இதனை தட்டிக்கேட்ட கண்டக்டர் வேலு மீது கேக்கை வீசி எறிந்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து கண்டக்டர் வேலு கொடுத்த புகாரின்பேரில் செம்பியம் போலீசார் 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் பஸ் தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவன் மற்றும் அவருடன் பஸ்தின கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 19 வயது வாலிபரையும் கைது செய்து உள்ளதாகவும், வாலிபர் சிறையிலும், மாணவன் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்