கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது
கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது;
கோவை
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினத்தை புனித வெள்ளியாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கின்றனர். மேலும் அவர் 3-வது நாளில் உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் பண்டிகையாகவும் கொண்டாடி வருகின்றனர். அதற்கு முந்தைய 40 நாட்களும், இயேசுவின் சிலுவை பாடுகளை நினைவு கூரும் வகையில் தவக்காலமாக கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கின்றனர்.
இந்த தவக்காலத்தின் போது கிறிஸ்தவர்கள் அசைவ உணவு சாப்பிடமாட்டார்கள். விரதம் மேற்கொள்ளும் கிறிஸ்தவர்கள் தாங்கள் உணவுக்காக செலவு செய்யும் தொகையை சேமித்து அதனை ஈஸ்டர் பண்டிகையின் போது ஏழை மக்களுக்கு வழங்கி மகிழ்வார்கள். இந்த தவக்காலத்தின் தொடக்கமாக கோவையில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று காலை சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
கோவை பெரியகடை வீதியில் உள்ள புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் நேற்று காலை தவக்கால தொடக்க திருப்பலி மற்றும் சிறப்பு பிரார்த்தனை கோவை கத்தோலிக்கமறை மாவட்ட பிஷப் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் மறை மாவட்ட முதன்மை குரு ஜான் ஜோசப், பொருளாளர் ஜோ பிரான்சிஸ், வட்டார முதன்மை குரு தனசேகர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் சாம்பல் புதனை குறிக்கும் வகையில் கிறிஸ்தவர்களின் நெற்றியில் பிஷப் தாமஸ் அக்குவினாஸ் சாம்பல் கொண்டு சிலுவை அடையாளமிட்டார்."மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய், மண்ணுக்கே திரும்புவாய் மறவாதே" என்பதை நினைவுபடுத்தி இந்த நிகழ்ச்சி நடந்தது.
கோவை புலியகுளம் புனித அந்தோணியார் ஆலயத்தில் பங்கு குரு ராயப்பன் தலைமையில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பிரார்த்தனை முடிவில் அனைவருக்கும் நெற்றியில் சாம்பல் கொண்டு சிலுவை அடையாளமிடப்பட்டது. இதேபோல் காட்டூர் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் ஆலய பங்கு குரு தாதேயூஸ், ஒண்டிப்புதூர் புனித ஜோசப் ஆலயத்தில் பங்கு குரு ஆரோக்கியசாமி, அன்னை திரேசா ஆலயத்தில் பால்ராஜ் அடிகள் ஆகியோர் தலைமையில் திருப்பலி நடந்தது. இதுபோல் கோவை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ளகிறிஸ்தவ ஆலயங்களில் சாம்பல் புதன் திருப்பலி நடைபெற்றது.
இதனை தொடர்ந்து தவக்காலத்தையொட்டி ஆலயங்களில் சிலுவைப்பாதை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அடுத்த மாதம் (ஏப்ரல்) 15-ந்தேதி புனித வெள்ளி கடைபிடிக்கப்படுகிறது. 17-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.