பிற்படுத்தப்பட்டோர் பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பொன்னாக்கானியில் இருதரப்பினர் மோதலில் 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து பிற்படுத்தப்பட்டோர் பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டை அருகே பொன்னாக்கானியில் இருதரப்பினர் மோதலில் 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து பிற்படுத்தப்பட்டோர் பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இருதரப்பினர் மோதலில் தொழிலாளி சாவு
சுல்தான்பேட்டை ஒன்றியம் பொன்னாக்கானியை சேர்ந்த மயில்சாமி (வயது 69), பால் வியாபாரி. அதே பகுதியை சேர்ந்தவர் ராமு என்ற கேசவன் (45), கட்டிட தொழிலாளி. கடந்த மாதம் 7-ந் தேதி மயில்சாமி-ராமு ஓட்டிவந்த இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இதை அறிந்த இருவரின் ஆதரவாளர்களும் ஆயுதங்களுடன் பயங்கரமாக மோதிக்கொண்டனர். இதில் பலத்த காயம் அடைந்த ராமு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் 16 பேர் வழக்குப்பதிவு செய்து, 10-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.
போலீசார் குவிப்பு
இருதரப்பினர் மோதலில் தொழிலாளி இறந்ததால் போகம்பட்டி, பொன்னாக்கானி ஆகிய பகுதிகளில் பதற்றம் நிலவியது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து அங்கு இயல்பு நிலை திரும்பியதால் பொன்னாக்கானி பகுதியில் இருந்து போலீசார் திரும்ப பெறப்பட்டனர்.
ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில், சுல்தான்பேட்டை பஸ் நிறுத்தம் முன்பு நேற்று பிற்படுத்தப்பட்டோர் பாதுகாப்பு இயக்கம் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில், மோதல் சம்பவத்தில் பெண்கள் உள்பட 13 பேர் மீது வன்கொடுமை உள்பட 6 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அதில் சிலரை கைது செய்தனர் இதனை கண்டித்தும், அவர்கள் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ்பெற கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வக்கீல் ஈசன் முருகசாமி கூறுகையில், பொன்னாக்கானி கிராமத்தில் பெண்கள் மற்றும் இளைஞர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப்பெற வேண்டும்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இந்த வழக்கை நேரடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும். இதனை நிறைவேற்றாவிட்டால் அனைத்து மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் விவசாயிகளை ஒன்று திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
பேரணியாக செல்ல முயற்சி
முன்னதாக பொன்னாக்கானியில் நடந்த மோதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிகேட்டு, கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு பேரணியாக செல்ல முயன்றனர்.
இதற்கு போலீசார் அனுமதி வழங்காததால் சுல்தான்பேட்டை பஸ் நிறுத்தம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.