தாம்பரம் ரெயில் நிலையம் அருகே அடையாள அட்டை உள்ள சிறு வியாபாரிகள் மட்டும் கடை நடத்த அனுமதி

தாம்பரம் ரெயில் நிலையம் அருகே அடையாள அட்டை உள்ள சிறு வியாபாரிகள் மட்டும் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் கடையை நடத்தி கொள்ளலாம் என அனுமதி அளிக்கப்பட்டது.

Update: 2022-03-08 10:24 GMT
சென்னையை அடுத்த தாம்பரம் ரெயில் நிலையம் அருகில் 100-க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் கடை நடத்தி வருகின்றனர். இந்த கடைகள் அனைத்தும் தாம்பரம் நகராட்சியாக இருந்தபோது அனுமதி அளிக்கப்பட்டு அதற்காக ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகின்றது.

இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென அங்கு வந்த போலீசார், இங்கு கடைகளை நடத்த கூடாது. கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என உதவி கமிஷனர் உத்தரவிட்டு இருப்பதாக கூறி கடைகளை அடித்து உடைத்து தூக்கி எறிந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த நடைபாதை வியாபாரிகள் 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து நேற்று சிறு வியாபாரிகளுடன் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் தாம்பரம் நகராட்சியாக இருந்தபோது அடையாள அட்டை வழங்கப்பட்ட சிறு வியாபாரிகள் மட்டும் தாம்பரம் ரெயில் நிலையம் அருகே பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாமல் கடையை நடத்தி கொள்ளலாம் என அனுமதி அளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்