முதல்-அமைச்சரின் தனி பிரிவின் கீழ் விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள்

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது.;

Update:2022-03-08 18:36 IST
நேற்று நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 365 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் முதல்-அமைச்சரின் தனி பிரிவின் கீழ் விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் ரூ.11,900 மதிப்பில் ரேவதி, பாஸ்கர் மற்றும் முத்துக்குமார் ஆகிய 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு 3 சக்கர சைக்கிள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்களை வழங்கினார். காஞ்சீபுரம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களுக்கு மாவட்ட கலெக்டரால் ரூ.65,748 மதிப்பிலான இலவச மின் மோட்டார் பொருத்திய தையல் எந்திரங்கள் வழங்கப்பட்டது.

மேலும் வருவாய்த்துறை சார்பில் குன்றத்தூர் வட்டம் வளையக்கரணை கிராமத்தை சேர்ந்த கலீல் ரஹ்மான் என்பவருக்கு இலவச வீட்டு மனை பட்டாவை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்