ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டரின் விலை உயர்ந்த சைக்கிளை திருடியவர் கைது
ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டரின் விலை உயர்ந்த சைக்கிளை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.;
சென்னை,
சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வருபவர் சாய் கார்த்திக். இவர் தனது விலை உயர்ந்த சைக்கிளில்தான் பணிக்கு வருவது வழக்கம். நேற்று முன்தினம் தனது சைக்கிளில் ஆஸ்பத்திரிக்கு வந்த டாக்டர் சாய் கார்த்திக், ஆஸ்பத்திரி வளாகத்தில் வழக்கமாக நிறுத்தும் இடத்தில் சைக்கிளை நிறுத்தி விட்டு பணிக்கு சென்றுவிட்டார். பணி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக சைக்கிளை எடுக்க வந்தபோது, அங்கு சைக்கிள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி ஆஸ்பத்திரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது, டிப்-டாப் ஆக உடை அணிந்து வந்த முதியவர் ஒருவர், டாக்டரின் விலை உயர்ந்த சைக்கிளை திருடி சென்றது பதிவாகி இருந்தது.
கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து டாக்டரின் சைக்கிளை திருடியதாக கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (வயது 58) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் பட்டினப்பாக்கம் பகுதியில் மேலும் ஒரு சைக்கிள் திருடியதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.