நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கர்ப்பிணி பெண்கள் சித்த மருந்துகளை சாப்பிட வேண்டும்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கர்ப்பிணி பெண்கள் சித்த மருந்துகளை சாப்பிட வேண்டும் என்று விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.;

Update:2022-03-09 20:10 IST
பொள்ளாச்சி

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கர்ப்பிணி பெண்கள் சித்த மருந்துகளை சாப்பிட வேண்டும் என்று விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

விழிப்புணர்வு கண்காட்சி

பொள்ளாச்சி அருகே உள்ள வேட்டைக்காரன்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சித்த மருத்துவ விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. இதற்கு மருத்துவ அலுவலர் டாக்டர் அழகப்பசாமி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பெண்களுக்கு ரத்த சோகை, மூட்டு வலி மற்றும் கர்ப்பக்காலத்தில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. கர்ப்பிணி பெண்களுக்கு முதல் 3 மாதங்களுக்கு மாதுளை மணப்பாகு கருவேப்பிலை சூரணம், 4, 5, 6-வது மாதங்களில் அன்னபேதி மாத்திரை, நெல்லிக்காய் இளகம், ஏலாதி மாத்திரை ஆகிய சித்த மருந்துகளை சாப்பிட வேண்டும்.

 7, 8, 9-வது மாதங்களில் சாப்பிட வேண்டிய பாவன பஞ்சாங்குல தைலம், உளுந்து தைலம் மற்றும் பிரசவத்திற்கு பின் தாய்ப்பால் சுரப்பினை அதிகப்படுத்த உதவும்.

நோய் எதிர்ப்பு சக்தி

மேலும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய சித்த மருந்துகளான சதாவரி லேகியம், உரை மாத்திரை, கால் வலிக்கு பயன்படுத்தப்படும் சிவப்பு குங்கில் தைலம் அடங்கிய சித்த மருந்துகள் அரசு மகப்பேறு சஞ்சீவி பெட்டகத்தில் உள்ளது. 

அரசு மகப்பேறு சஞ்சீவ் பெட்டக சித்த மருந்துகளை சாப்பிடுவதன் மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு ஆரோக்கியமான குழந்தை பிறக்கும். அரசு ஆஸ்பத்திரியில் உள்ள சித்த மருத்துவ பிரிவில் இந்த மருந்து பெட்டகத்தை கர்ப்பிணி பெண்கள் வாங்கி கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

கண்காட்சியில் மகப்பேறு சஞ்சீவ் மருந்து பெட்டகம் மற்றும் பெண்கள் நலத்திற்கு பயன்படும் மூலிகைகள் மற்றும் காய்கறிகள் கண்காட்சியில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. மேலும் மூலிகைகள், காய்கறிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சித்த மருத்துவ கண்காட்சியினை டாக்டர் நல்லதம்பி ஆலோசனையின்படி மருந்தாளுனர் சத்யபாமா ஏற்பாடு செய்திருந்தார். 

இதில் வேட்டைக்காரன்புதூர் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் ராஜேஸ், வில்சன், ஊழியர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்