எட்டிமடை பேரூராட்சி துணைத்தலைவர் பதவியில் இருந்து மரகதமணி ராஜினாமா
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவை ஏற்று எட்டிமடை பேரூராட்சி துணைத்தலைவர் பதவியில் இருந்து மரகதமணி ராஜினாமா செய்தார்.;
மலுமிச்சம்பட்டி
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவை ஏற்று எட்டிமடை பேரூராட்சி துணைத்தலைவர் பதவியில் இருந்து மரகதமணி ராஜினாமா செய்தார்.
மறைமுக தேர்தல்
கோவை மாவட்டம் எட்டிமடை பேரூராட்சியில் 12 வார்டுகள் உள்ளன. சமீபத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், 8 வார்டுகளை தி.மு.க., 4 வார்டுகளை அ.தி.மு.க. கைப்பற்றியது. பின்னர் தலைவர், துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் கடந்த 4-ந் தேதி நடைபெற்றது.
இதையொட்டி 3-வது வார்டில் வெற்றி பெற்ற கீதா ஆனந்தகுமார் தலைவர் பதவிக்கும், 12-வது வார்டில் வெற்றி பெற்ற சுகுணா செந்தில்குமார் துணைத்தலைவர் பதவிக்கும் தி.மு.க. சார்பில் போட்டியிட அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஒரே கட்சியை சேர்ந்தவர்கள்
இதையடுத்து நடந்த தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் கீதா ஆனந்தகுமார் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் நடந்த துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் சுகுணா செந்தில்குமாரை எதிர்த்து அதே கட்சியை சேர்ந்த 11-வது வார்டு கவுன்சிலர் மரகதமணி களம் இறங்கினார். தொடர்ந்து நடந்த தேர்தலில் மரகதமணி வெற்றி பெற்றார். இதனால் சுகுணா செந்தில்குமார் அதிர்ச்சி அடைந்தார்.
ராஜினாமா
இதற்கிடையில் தி.மு.க. தலைமை அறிவித்த வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற தி.மு.க.வினர், கூட்டணி கட்சிக்கு ஒதுக்கிய இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தி.மு.க.வினர் பதவி விலக வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதை ஏற்று எட்டிமடை பேரூராட்சி துணைத்தலைவர் பதவியில் இருந்து மரகதமணி ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை செயல் அலுவலர் சூசை இன்பராஜிடம் வழங்கினார்.