ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததால் தொழிலாளி தற்கொலை

சித்தாமூர் அருகே ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2022-03-11 15:19 IST
கூலித்தொழிலாளி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சரவம்பக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 55). கூலித்தொழிலாளி. இவருக்கும், செங்கல்பட்டு அடுத்த வீராபுரத்தை சேர்ந்த எல்லப்பன் என்பவருக்கும் 8.3.2021 அன்று சித்தாமூர் அடுத்த வால்காடு என்ற இடத்தில் சாவு ஊர்வலத்தின் போது தகராறு ஏற்பட்டது. வீட்டுக்கு சென்ற எல்லப்பன் அதன்பின்னர் இறந்து விட்டார்.

அண்ணாதுரையின் மகன் பிரபு தாக்கியதால்தான் எல்லப்பன் இறந்துவிட்டார் என்று அவரது குடும்பத்தினர் தங்கள் சமுதாய பஞ்சாயத்தில் புகார் அளித்தனர். எல்லப்பன் குடும்பத்திற்கு அண்ணாதுரை நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று பஞ்சாயத்தில் முடிவு செய்யப்பட்டு இருந்து. ஆனால் அதை அண்ணாதுரை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

தற்கொலை

இதையடுத்து மீண்டும் சமுதாய பஞ்சாயத்து கூடி அண்ணாதுரை மற்றும் அவரது குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக தெரிகிறது.

இது குறித்து நேற்று முன்தினம் அண்ணாதுரை சித்தாமூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதனால் மன வருத்தத்தில் இருந்த அண்ணாதுரை நேற்று காலை சேலையால் மின்விசிறியில் தூக்குப்போட்டு கொண்டார். இதை பார்த்த அவரது மகன் மாணிக்கம் அவரை உடனடியாக மீட்டு அங்கிருந்து அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு அண்ணாதுரை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அண்ணாதுரையின் மகன் மாணிக்கம் சித்தாமூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுல்ராஜ் வழக்குப்பதிவு செய்து அண்ணாதுரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்