மராத்தி நடிகரை மிரட்டி செல்போன் பறிப்பு- கார் டிரைவருக்கு வலைவீச்சு
மராத்தி நடிகரை மிரட்டி செல்போன் பறித்து சென்ற கார் டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;
மும்பை,
மராத்தி நடிகரை மிரட்டி செல்போன் பறித்து சென்ற கார் டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வாடகை கார்
மும்பை போரிவிலியை சேர்ந்தவர் பிரமோத் ஷிண்டே (வயது44). மராத்தி நாடக நடிகரான இவர், கடந்த 9-ந் தேதி காட்கோபரில் நடந்த நாடகத்தில் கலந்துகொண்டார். பின்னர் வீட்டிற்கு செல்ல தனியார் வாடகை கார் நிறுவனத்தை தொடர்பு கொண்டு காரை முன்பதிவு செய்தார்.
இந்தநிலையில் அங்கு வந்த காரில் அவர் உள்பட நாடகத்தில் பங்கேற்ற 11 வயது சிறுமியுடன் சென்றார். நடிகரின் வீட்டில் இறக்கி விடாமல் சிறிது தொலைவில் காரை நிறுத்தி இறங்குமாறு டிரைவர் தெரிவித்தார். இதனால் நடிகருக்கும் கார் டிரைவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கார் டிரைவர் விபத்து ஏற்படுத்தப்போவதாக மிரட்டினார்.
போலீசில் புகார்
இதனால் பயந்து போன நடிகர் பிரமோத் ஷிண்டே காரின் பதிவெண்ணை செல்போனில் பதிவு செய்தார். இதனை கண்ட டிரைவர் அவரது செல்போனை பறித்து கொண்டு நடுவழியில் இறக்கி விட்டு தப்பி சென்றார். இது பற்றி நடிகர் கஸ்தூர்பா மார்க் போலீசில் டிரைவருக்கு எதிராக புகார் அளித்தார்.
இந்த புகாரின் படி போலீசார் நடத்திய விசாரணையில், வாடகை கார் டிரைவர் விராரை சேர்ந்த ராகேஷ் யாதவ் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.