போலி விசா வழங்கி ரூ.35¾ லட்சம் மோசடி

தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் போலி விசா வழங்கி ரூ.35¾ லட்சம் மோசடி நடந்தது குறித்து கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2022-03-14 20:19 IST
கோவை

தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் போலி விசா வழங்கி ரூ.35¾ லட்சம் மோசடி நடந்தது குறித்து கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசில் புகார்

திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைபேரை சேர்ந்தவர் வனராஜா(வயது 39). இவர் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திருவள்ளூர் கன்னிகைபேரில் உரிமம் பெற்று வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தி வருகிறேன். வாடிக்கையாளர்களுக்கு வேலை தொடர்பான பயிற்சிகள் அளித்து, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை பெற்று கொடுத்து, அவர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி கொடுத்து வருகிறோம். 

இந்தநிலையில் எனக்கு, ‘வாட்ஸ்-அப்’ குழு மூலம் கோவை சித்தாபுதூரில் வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தி வந்த ஒருவர் அறிமுகமானார். அவர் தனது நிறுவனத்தின் மூலம் நியூசிலாந்து, நார்வே ஆகிய நாடுகளில் பலருக்கு வேலை வாங்கி கொடுத்து உள்ளதாக கூறி அது சம்பந்தமான ஆவணங்களை காட்டினார். 

ரூ.35 லட்சத்து 70 ஆயிரம்

இதை நம்பி கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் எனது நிறுவனத்தில் பயிற்சியில் இருந்த 18 பேருக்கு வேலை வாங்கி கொடுக்க அவரை அணுகினேன். அதற்கு அவர், வேலை தொடர்பான விசாவை பாஸ்போர்ட்டில் பதிவு செய்தவுடன் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் வீதம் 18 பேருக்கு ரூ.35 லட்சத்து 70 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கேட்டார்.

அதற்கு சம்மதம் தெரிவித்து கடந்த 15-2-2021 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டேன். பின்னர் நியூசிலாந்து, நார்வே ஆகிய நாடுகளில் வேலை இருப்பதாக கூறி ஆன்லைன் விசா கொடுத்தார். அதை பெற்றுக்கொண்டு முதற்கட்டமாக ரூ.35 லட்சத்து 70 ஆயிரத்தை அவரது வங்கிக்கணக்குக்கு செலுத்தினேன். மேலும் அதற்கான ஒப்புகை சீட்டை பெற்று கொண்டேன்.

கொலை மிரட்டல்

பின்னர் அந்த விசாவின் அடிப்படையில் 18 பேரும், வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல முயன்றபோது, அது போலியானது என்பது தெரியவந்தது. இது தொடர்பாக அந்த நபரை நேரில் சந்தித்து கேட்டபோது, முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். 

மேலும் பணத்தை திரும்ப கொடுப்பதாக தெரிவித்தார். ஆனால் இதுவரை பணத்தை திரும்ப தரவில்லை. தொடர்ந்து கேட்டால், கொலை மிரட்டல் விடுக்கிறார். எனவே அந்த மோசடி ஆசாமி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்