ஸ்ரீபெரும்புதூர் அருகே கொத்தடிமைகளாக இருந்த 11 பேர் மீட்பு; ஆர்.டி.ஓ. நடவடிக்கை
ஸ்ரீபெரும்புதூர் அருகே கொத்தடிமைகளாக இருந்த 11 பேரை ஆர்.டி.ஓ மீட்டு அரசு நிவாரணம் வழங்கி மறு வாழ்வுக்கு வழிவகை செய்து அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார்.;
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான சவுக்கு தோப்பில் இருளர் இன மக்களை கொத்தடிமைகளாக வைத்து மரம் வெட்டும் வேலையில் ஈடுப்படுத்துவதாக ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. சைலந்தருக்கு புகார் வந்தது. இதையடுத்து ஆர்.டி.ஓ. சைலந்தர், அதிகாரிகள் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சவுக்கு தோப்பில் 7 ஆண்கள், 3 பெண்கள், ஒரு சிறுவன் மரம் வெட்ட கொத்தடிமையாக ஈடுபடுத்தப்பட்டது தெரியவந்தது. அவர்கள் வந்தவாசி, அச்சரபாக்கம் பகுதியை சேர்ந்தவர்கள். ஆர்.டி.ஓ. சைலந்தர் கொத்தடிமையாக இருந்தவர்களை மீட்டு அரசு நிவாரணம் வழங்கி மறு வாழ்வுக்கு வழிவகை செய்து அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார்.