தொழில் அதிபர் உள்பட 2 பேரிடம் ரூ.2 லட்சம் மோசடி
கோவையில் ஆன்லைன் மூலம் தொழில் அதிபர் உள்பட 2 பேரிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்யப்பட்டது. தொடர் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.;
கோவை
கோவையில் ஆன்லைன் மூலம் தொழில் அதிபர் உள்பட 2 பேரிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்யப்பட்டது. தொடர் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கிரெடிட் கார்டு உச்சவரம்பு
கோவையை அடுத்த வெள்ளலூர் அருகே உள்ள அசோகர் வீதியை சேர்ந்தவர் அதியமான் (வயது 55). தொழில் அதிபர். இவரது செல்போனுக்கு சமீபத்தில் ஒரு அழைப்பு வந்தது.
அதில் பேசிய நபர், கிரெடிட் கார்டு உச்சவரம்பு தொகையை அதிகரித்து தருவதாக கூறினார். இதை நம்பிய அதியமான், தனது வங்கி கணக்கு விவரங்களை தெரிவித்தார். இதையடுத்து வந்த ஓ.டி.பி. எண்ணையும் தெரிவித்தார்.சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்து 458 எடுக்கப்பட்டது.
பண மோசடி
இதேபோன்று சூலூர் அருகே உள்ள காங்கேயம்பாளையத்தை சேர்ந்தவர் மணியன் (47). தனியார் நிறுவன ஊழியர். இவர் ஆன்லைனில் வங்கி வாடிக்கையாளர் சேவை விவரங்களை தேடினார். சிறிது நேரத்தில் அவரது செல்போனுக்கு அழைப்பு வந்தது.
அதில் பேசியவர் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு குறித்த தகவல்களை வழங்கி, செல்போனுக்கு வரும் ஓ.டி.பி. எண்களை அனுப்புமாறு தெரிவித்தார். இதை நம்பிய மணியன் ஓ.டி.பி. எண்களை அவருக்கு அனுப்பினார். சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.74 ஆயிரத்து 46 எடுக்கப்பட்டது. இந்த பண மோசடி குறித்த புகார்களின் பேரில் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் தொடரும் ஆன்லைன் மோசடிகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.