ஏகாம்பரநாதர் கோவிலில் திருக்கல்யாணம்
காஞ்சீபுரத்தில் ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் நேற்று அதிகாலை வெகு விமரிசையாக நடைபெற்றது.;
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் மண் ஸ்தலமாக விளங்கும் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவம் கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றுமுதல் காலையிலும் மாலையிலும் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்து வருகிறார்.
இந்நிலையில் 11-ம் நாள் முக்கிய நிகழ்வான பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் நேற்று அதிகாலை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏகாம்பரநாதர் வெண்ணிற பட்டாடை உடுத்தியும், ஏலவார்குழலி அம்மையார் சிகப்பு நிற பட்டாடை அணிந்தும் சாமந்தி பூ, ரோஜா மலர் மாலைகள் அணிந்து மணகோலத்தில் எழுந்தருளி ஒருவருக்கொருவர் மாலை மாற்றும் நிகழ்வு நடைபெற்றது.
அதனை தொடர்ந்து மணமேடையில் காட்சியளித்து மங்களவாத்திய இசையுடன் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதைக்காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.