ஆழியாறு தடுப்பணையில் தடையை மீறி குளித்த சுற்றுலா பயணிகள்

ஆழியாறு தடுப்பணையில் தடையை மீறி குளித்த சுற்றுலா பயணிகளை போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பினர்.;

Update:2022-03-20 19:35 IST
பொள்ளாச்சி

ஆழியாறு தடுப்பணையில் தடையை மீறி குளித்த சுற்றுலா பயணிகளை போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பினர்.

ஆழியாறு தடுப்பணையில் குளிக்க தடை

கோவை மாவட்டத்தில் தற்போது கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் கோவையில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சென்று வருகிறார்கள். குறிப்பாக வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பொள்ளாச்சி அருகே உள்ள வால்பாறை, ஆனைமலை, ஆழியாறு பகுதிக்கு வந்து வண்ணம் உள்ளனர். குறிப்பாக விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவார்கள். ஆனால் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் குறைந்த அளவிலேயே வந்தனர். நேற்று ஆழியாறு அணை பூங்கா, கவியருவி (குரங்கு நீர்வீழ்ச்சி) அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்தனர். தற்போது, வறட்சி நிலவுவதால் கவியருவியில் நீர் வரத்து குறைந்துள்ளது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி இல்லை. இந்த நிலையில் சுற்றுலா பயணிகள் நலன் கருதி ஆபத்தான ஆழியாறு தடுப்பணையில் குளிக்க பொதுப்பணித்துறை மற்றும் ஆழியார் போலீசார் தடை விதித்துள்ளனர். 

தடையை மீறிய சுற்றுலா பயணிகள்

மேலும், தடுப்பணையில் புதைமணல் மற்றும் ஆழமான சுழல் நிறைந்த பகுதி இருப்பதால் சுற்றுலாப் பயணிகளின் அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அத் தடையை மீறி நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆழியாறு தடுப்பணையில் குளித்துக் கொண்டிருந்தனர். இதுபற்றி அறிந்ததும் ஆழியாறு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரகுநாத் மற்றும் போலீசார் அங்கு சென்று, அணைப்பகுதியில் குளித்துக் கொண்டு இருந்த சுற்றுலா பயணிகளை உடனடியாக வெளியேறும் படி எச்சரிக்கை விடுத்தனர். மேலும், இனி ஆபத்தான இந்த பகுதியில் குளிக்க கூடாது என அறிவுரை வழங்கினர். இதுகுறித்து உள்ளூர் பொதுமக்கள் கூறுகையில், தடுப்பணை புதைமணலில் சிக்கி பலர் உயிரிழந்து உள்ளனர். இதுகுறித்து பலருக்கும் தகவல் தெரியவில்லை. இது தெரியாமல் பலர் குளிக்கின்றனர். அணை பகுதியில் தடுப்பு வேலிகள் அமைத்தால் மட்டுமே சுற்றுலாப் பயணிகளை கட்டுப்படுத்த முடியும். இதற்காக கோட்டூர் பேரூராட்சி மற்றும் பொதுப்பணித்துறை மூலம் விரைவில் தடுப்பு வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றனர். 

மேலும் செய்திகள்