காஞ்சீபுரம் மாநகராட்சி மேயர் ஆய்வு
காஞ்சீபுரம் மாநகராட்சி மேயரான மகாலட்சுமி யுவராஜ் மாநகராட்சிகுட்பட்ட பல்வேறு பகுதியில் சுகாதார பணிகளை ஆய்வு செய்து உடனடி நடவடிக்கையும் மேற்கொண்டு வருகிறார்.;
அந்த வகையில் காஞ்சீபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 28-வது வார்டில் உள்ள திருவீதி பள்ளம் பகுதியில் காஞ்சீபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாநகராட்சி உறுப்பினர் கமலகண்ணன், மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் அந்த பகுதியில் உள்ள பொது கழிவறைகள், சேதமடைந்துள்ள தண்ணீர் தொட்டி, மின்கம்பங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மாநகராட்சி மேயரிடம் மழை காலங்களில் குளம் போல் தண்ணீர் தேங்குகிறது. இதனால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றோம். மேலும், பொது கழிவறையில் போதுமான அளவு கழிவுநீர் சேகரிக்கும் தொட்டி இல்லாததால் கழிவுநீர் சாலையில் பெருகெடுத்து ஓடுகிறது. இதனால் நோய் தொற்று அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் கூறினர்.
பின்னர், மேயர் மகாலட்சுமி பொதுமக்களிடம் மழை காலங்களில் தண்ணீர் தேங்காத வகையில் மழைநீர் வடிகால் அமைக்கப்படும் எனவும், கழிவு நீர் சாலையில் செல்லாத வகையில் கழிவு நீர் சேகரிக்கும் தொட்டி அகலப்படுத்தப்படும். மேலும், சேதமடைந்த தண்ணீர் தொட்டிக்கு பதிலாக புதிதாக தங்குதடையின்றி தண்ணீர் கிடைக்கும் வகையில், புதிய தண்ணீர் தொட்டி அமைத்து தரப்படும் எனவும் உறுதி அளித்து, உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.