வால்பாறையில் போலீஸ் வாகனம் திரும்ப பெறப்பட்டதால் ரோந்து பணியில் சிக்கல்

வால்பாறையில் போலீஸ் வாகனம் திரும்ப பெறப்பட்டதால் ரோந்து பணியில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அதனால் அந்த வாகனத்தை மீண்டும் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் போலீசார் கோரிக்கை விடுத்து உள்ளனர்.;

Update:2022-03-22 19:12 IST
வால்பாறை

வால்பாறையில் போலீஸ் வாகனம் திரும்ப பெறப்பட்டதால் ரோந்து பணியில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அதனால் அந்த வாகனத்தை மீண்டும் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் போலீசார் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

போலீஸ் ரோந்து வாகனம்

வால்பாறை உட்கோட்ட காவல்துறையை பொறுத்தவரை வால்பாறை மலைப்பகுதியில் வால்பாறை, முடீஸ், காடம்பாறை, சேக்கல்முடி ஆகிய போலீஸ் நிலையங்கள் உள்ளன. இந்த 4 போலீஸ் நிலையங்களில் வால்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ஒரு போலீஸ் வாகனம், முடீஸ் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ஒரு வாகனம் என்று 2 வாகனங்கள் போலீசாரின் தேவைக்காக இருந்து வந்தது.
ஆனால் கடந்த 25 ஆண்டுகளாக வால்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு மட்டும் ஒரே ஒரு போலீஸ் வாகனம் இருந்து வந்தது. மேலும் கூடுதலாக ஒரு வாடகை வாகனம் போலீசார் பயன்படுத்தினர். இதனால் பல்வேறு சிரமங்கள், வழக்கு பதிவுக்கு வருபவர்களிடம் வாகனத்திற்கான வாடகை பெற்றுத்தரவேண்டிய இக்கட்டான சூழ்நிலை இருந்து வந்தது.

ரோந்து செல்வதில் சிக்கல்

இந்த நிலையில் வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களும் பயன்படுத்தி கொள்ளும் வகையில்  ‘டவுன் பேட்ரோல்’ என்ற பெயரில் போலீஸ் வாகனம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி உயர் போலீசாரின் உத்தரவின் பேரில் வழங்கப்பட்டது. இதனால் வால்பாறை பகுதி போலீசார் மத்தியிலும் பொது மக்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் திடீரென இந்த டவுன் பேட்ரோல் வாகனத்தை போலீஸ் உயர் அதிகாரிகள் திரும்ப பெற்றுக் கொண்டனர். இதனால் இரவு ரோந்துப் பணிக்காக போலீசார் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 
மேலும் எந்த ஒரு வழக்கு சம்மந்தமாக விசாரணைக்காக எந்த ஒரு எஸ்டேட் பகுதிக்கும் உரிய நேரத்திற்கு செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

கோரிக்கை

வால்பாறை பகுதியை பொறுத்தவரை நள்ளிரவில் வனவிலங்குகள் தாக்குதல் விபத்து ஏற்படும் போதும் செல்வதிலும் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. 
எனவே போலீஸ் உயர் அதிகாரிகள் வால்பாறை பகுதியைச் சேர்ந்த மலைப்பகுதி மக்களின் பாதுகாப்பு நலன் கருதி வால்பாறை பகுதி போலீசார் பயன்படுத்துவதற்கு வசதியாக மீண்டும் போலீஸ் ரோந்து வாகனத்தை வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வால்பாறை பகுதி பொது மக்களும், வால்பாறை, காடம்பாறை, முடீஸ், சேக்கல்முடி போலீசாரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்