புளியந்தோப்பில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் மகன் கைது
புளியந்தோப்பில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் மகனை கைது செய்து அவரிடமிருந்து விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.;
சென்னையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், விபத்தை ஏற்படுத்தும் வகையிலும் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதைத்தொடர்ந்து, கடந்த 21-ந் தேதி இரவு புளியந்தோப்பு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, புளியந்தோப்பு பகுதியில் இருந்து ராயபுரம் மேம்பாலம் வரை அப்போது 5 பேர் கொண்ட கும்பல் அதிநவீன மோட்டார் சைக்கிள்களுடன் வேகமாக பந்தயத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, அவர்களை மடக்கிப் பிடித்த போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனசேகர் என்பவரின் மகனும், தனியார் கல்லூரி மாணவருமான டிவின் குமார் (வயது 20), தண்டையார்பேட்டையை சேர்ந்த மோவின் (20), தனியார் கல்லூரி 3-ம் ஆண்டு மாணவரான ஹரிஷ் குமார் (22), புதுவண்ணாரப்பேட்டை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவரான பாலாஜி (22), திருவொற்றியூரை சேர்ந்த சட்ட கல்லூரி மாணவருமான சல்மான் (வயது 19) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.