பாசன சங்க தலைவர் பதவிக்கான தேர்தல்
பொள்ளாச்சியில் பாசன சங்க தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்தது. தொடர்ந்து வெற்றி பெற்றவர்கள் விவரம் வெளியிடப்பட்டது.;
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் பாசன சங்க தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்தது. தொடர்ந்து வெற்றி பெற்றவர்கள் விவரம் வெளியிடப்பட்டது.
பாசன சங்க தலைவர் பதவி
பி.ஏ.பி. திட்டத்தில் ஆழியாறு பழைய, புதிய ஆயக்கட்டு பாசன நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களுக்கான தலைவர், ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தலை நடத்த கலெக்டர் சமீரன் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து 21 பாசன நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களில் தலைவர் பதவி மற்றும் 90 ஆட்சி மண்டல உறுப்பினர்களை நேரடி தேர்தல் மூலமாக தேர்வு செய்வதற்கு கடந்த 16-ந் தேதி வேட்புமனுக்கள் பெறப்பட்டன. தொடர்ந்து 21-ந் தேதி வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடந்தது.
இதில் மொத்தம் உள்ள 90 ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட அனைத்து உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் 21 சங்கங்களுக்கு தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர்களில் 18 சங்கங்களுக்கு தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
நேரடி தேர்தல்
இந்த நிலையில் மீதமுள்ள மார்ச்சநாயக்கன்பாளையம், மண்ணூர், ஜமீன் ஊத்துக்களி ஆகிய 3 சங்கங்களுக்கு இன்று நேரடி தேர்தல் நடந்தது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரை நடந்தது.
வேட்டைக்காரன்புதூர் கால்வாய் மார்ச்சநாயக்கன்பாளையம் பாசன நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் பதவிக்கு ஆனைமலை பேரூராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியிலும், பொள்ளாச்சி கால்வாய் ஜமீன்ஊத்துக்குளி பாசன நீரினை பயனப்படுத்துவோர் சங்க தலைவர் பதவிக்கு ஜமீன்ஊத்துக்குளி அரசு மேல்நிலைப்பள்ளியிலும், மண்ணூர் கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் பதவிக்கு ராமநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் தேர்தல் நடந்தது.
வாக்கு எண்ணிக்கை
இதையடுத்து மாலை 4 மணிக்கு ஜமீன்ஊத்துக்குளியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்தல் நடத்தும் அலுவலரான தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் தலைமையில் வாக்கு எண்ணிக்கை நடந்தது.
அதில் மண்ணூர் தலைவராக 179 ஓட்டுகள் பெற்று தர்மலிங்கம் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட செல்வராஜ் 136 வாக்குகள் பெற்றார். ஜமீன் ஊத்துக்குளி தலைவராக 213 ஓட்டுகள் பெற்று ராம் மனோகர் காளிதாஸ் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ராஜவேல் 109 வாக்குகள் பெற்றார். மார்ச்சநாயக்கன்பாளையம் தலைவராக 147 வாக்குகள் பெற்று தாமோதரசாமி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சந்திரசேகர் 75 வாக்குகள் பெற்றார்.